சென்னை புறநகரில் உள்ள வீடுகளில் ஜன்னலோரம் தூங்குபவர்களை நோட்டமிட்டு நகை பறித்த ஆந்திர கொள்ளையர்கள் கைது: 15 சவரன் பறிமுதல்

வேளச்சேரி: சென்னை புறநகரில் உள்ள வீடுகளில் இரவில் ஜன்னலோரம் தூங்குபவர்களை நோட்டமிட்டு, நகை பறித்து வந்த ஆந்திர கொள்ளையர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.வேளச்சேரி, ராம் நகரை சேர்ந்த சரஸ்வதி (84), கடந்த அக்டோபர் 12ம் தேதி இரவு தனது வீட்டின் ஜன்னலை திறந்து வைத்து, அருகில் படுத்து தூங்கியுள்ளார். நள்ளிரவில், ஜன்னல் வழியே கையை விட்ட மர்ம நபர், சரஸ்வதி கழுத்தில் கிடந்த 8 சவரன் செயினை பறித்தார். திடுக்கிட்டு எழுந்த சரஸ்வதி, அலறி கூச்சலிட்டார். ஆனால், அதற்குள் செயினுடன் மர்ம நபர் தப்பினார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில், வேளச்சேரி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவ இடத்தில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, கொள்ளையனை தேடி வந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம், நகரி பகுதியை சேர்ந்த திருலோகசந்தர் (56) என்பதும், திருடிய செயினை அதே பகுதியில் உள்ள உகமாராம் (40) என்பவரின் அடகு கடையில், வைத்து பணம் பெற்று, ஆந்திராவுக்கு சென்றதும் தெரியவந்தது. அடகு கடைக்காரர் கொடுத்த தகவலின் பேரில், தனிப்படை போலீசார்  ஆந்திரா சென்று, திருலோகசந்தரையும், அவனது கூட்டாளியையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கொள்ளையன் திரிலோகசந்தர் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து தங்கி, இரவில் வீட்டின் ஜன்னல் ஓரம் தூங்குபவர்களை நோட்டமிட்டு, நள்ளிரவில் செயின் பறித்து சென்று, அதை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். கடந்த 2004ம் ஆண்டு திருலோகசந்தர்  மடிப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவனிடம் இருந்து 89 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதும்,  இவர் மீது ஆதம்பாக்கம், பள்ளிகரணை, மடிப்பாக்கம், வேளச்சேரி ஆகிய காவல் நிலையங்களில் 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: