பூங்காவில் தேங்கிய நீரில் மூழ்கி காவலாளி சாவு

தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன் (37). அதே பகுதி இளைய தெருவில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்ற மோகன், மழை வெள்ளத்தால் பூங்காவில் தேங்கியிருந்த குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து, மோகனின் தாய் அஞ்சலை மற்றும் பெண் ஊழியர் மஞ்சுளா ஆகியோர், டீ சாப்பிடுவதற்காக மோகனை அழைக்க அங்கு சென்றுள்ளனர். பூங்கா நுழைவாயிலில் மோகன் இல்லாததால், உள்ளே சென்று அவரை தேடியுள்ளனர்.

அப்போது, தேங்கிய மழைநீரில் மோகன் விழுந்து மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மோகனுக்கு வலிப்பு நோய் இருப்பதும், பணியின்போது திடீரென வலிப்பு வந்து தேங்கிய மழைநீரில் விழுந்ததால் நீரில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: