பெற்றோர், சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதியில்லை 9ம் தேதி பாரதிதாசன் பல்கலையில் 37வது பட்டமளிப்பு விழா கவர்னர், உயர்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு

திருச்சி, டிச.7: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2 ஆண்டுக்குப்பின் வரும் 9ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெற்றோர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு அனுமதியில்லை என பதிவாளர் தெரிவித்துள்ளார். திருச்சி-புதுக்கோட்டை சாலையில் மாத்தூர் அருகே பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. பாரம்பரியமிக்க இப்பல்கலையில் வரும் 9ம் தேதி 37வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. கொரோனா காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. 2 ஆண்டுக்குப்பின் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) கோபிநாத் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 37வது பட்டமளிப்பு விழா வரும் 9ம் தேதி காலை 10.30 மணிக்கு பல்கலைப்பேரூர் வளாக பட்டமளிப்பு விழா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமாகிய ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமையேற்கிறார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமாகிய பொன்முடி பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார். டில்லியில் உள்ள இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் தலைவர் (பொ) முனைவர் கனகசபாபதி, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பட்டங்களை வழங்குகிறார்.

தற்போது முனைவர் பட்டம் பெற, 2.10.2019 முதல் 20.11.2021ம் தேதிக்குள் தகுதியடைந்துள்ள அனைவரும் இப்பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர் தம் பெயர், பாடம், இருக்கை மற்றும் வரிசை எண் ஆகியவற்றை பல்கலைக்கழக இணையதளத்தில் (www.bdu.ac.in) சரிபார்த்த பின் அவர்களுக்குரிய நுழைவு அட்டையினை எளிதாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ளலாம். பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பில் முதல் தரவரிசை பெற்ற மாணவர்களுக்கு நுழைவு அட்டை கடந்த மாதம் 27ம் தேதி அன்று பதிவுத் தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. நுழைவு அட்டை கிடைக்கப் பெறாத முதல் தரவரிசை பட்டியிலில் உள்ள மாணவ, மாணவியர்களும் தங்களுடைய நுழைவு அட்டையினை பல்கலைக்கழக இணையதளத்தில் எளிதாக பதிவிறக்கம் செய்து அச்சிட்டு கொள்ளலாம்.

இவ்விழாவின் ஒத்திகை நிகழ்ச்சி நாளை (8ம் தேதி) அன்று காலை 11 மணியளவில் நிகழவுள்ளது. ஒத்திகை நிகழ்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் காலை 10.30 மணிக்குள் தமது இருக்கையில் அமர வேண்டும். பட்டமளிப்பு விழா மற்றும் ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது அச்சிட்ட நுழைவு அட்டையுடன் ஏதேனும் ஒரு புகைப்பட அடையாள அட்டை அவசியமாக எடுத்து வர வேண்டும். அரசின் அறிவுறுத்தலின்படி, கொரோனா முன் எச்சரிக்கை விதிகளை முழுமையாக கடைப்பிடித்து, முகக்கவசம் அணிய வேண்டும். பட்டதாரிகள் 9ம் தேதி அன்று காலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள் விழா நடைபெறும் இடத்தில் அமர வேண்டும். 9 மணிக்கு மேல் பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் மாணவ, மாணவியர்களை அனுமதிக்க இயலாது. மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு அனுமதி இல்லை என பதிவாளர் (பொ) கோபிநாத் தெரிவித்துள்ளார்.

Related Stories: