ஊட்டியில் 5 மாநில உதவி வனப்பாதுகாவலர்களுக்கான வனப்பகுதியில் நீர் மேலாண்மை குறித்த பயிற்சி துவக்கம்

ஊட்டி,  டிச. 7:  ஊட்டியில்  உள்ள இந்திய மண் மற்றும் நீர்வளப் ஆராய்ச்சி மையத்தில்  தமிழ்நாடு,  சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா மற்றும் ஜம்மு  காஷ்மீர் மாநிலங்களை  சேர்ந்த 45 உதவி வன பாதுகாவலர்களுக்கான  வனப்பகுதிகளில் நீர்பிரி  முகடுப்பகுதி மேலாண்மை குறித்த திறன் மேம்பாட்டு  பயிற்சி நேற்று  துவங்கியது. முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் வரவேற்று  பேசியதாவது:  வனப்பகுதிகளில் நீர் பிரி முகடுப்பகுதி மேலாண்மை திட்டத்தை  செயல்படுத்துவது  குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பதே முக்கிய  நோக்கமாகும்.  இப்பயிற்சியில் மண் பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால்  ஓடைகள் பராமரிப்பு,  மழைநீர் சேமிப்பு மற்றும் கசிவுநீர் கட்டமைப்பிற்கு  இடம் தேர்வு செய்தல்  மற்றும் வடிவமைத்தல் போன்றவைகள் குறித்து பயிற்சி  அளிக்கப்பட உள்ளது.  வனப்பகுதிகளில் நீர்பாதுகாப்பின் அவசியம் உள்ளது.  தற்போதைய கால கட்டத்தில்  மனித-வன விலங்கு மோதல்கள். காட்டு தீ போன்றவைகள்  ஏற்படுகின்றன. நீர்பாதுகாப்பு  இல்லாததால் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள்  ஏற்படுகின்றன. நீர் பாதுகாப்பு  கட்டமைப்புகள் இல்லாததால் மழை பெய்யும்போதும் தண்ணீர் சேமிக்க வழியின்றி  வீணாகி விடுகிறது.

மேலும்  செயல்முறை பயிற்சியாக மண் மற்றும் நீர்வள  பாதுகாப்பு கட்டமைப்பு, வடிகால்  ஓடைகள், மழைநீர் சேமிப்பு, செலவுகளை  மதிப்பீடு செய்தல், திட்ட அறிக்கை  தயார் செய்தல் போன்றவையும்  பயிற்றுவிக்கப்படுகிறது. பயிற்சியில்  பங்கேற்றுள்ள உதவி வன பாதுகாவலர்கள்  நஞ்சநாடு கிராமத்தில் உள்ள நீர்பிரி  முகடுப்பகுதியில் கள பயிற்சி  மேற்கொண்டு மாதிரி திட்ட அறிக்கை தயார் செய்ய  உள்ளனர் என்றார். ஊட்டி  மையத்தின் தலைவர் கண்ணன் தலைமை வகித்து,  வனப்பகுதிகளில் நீர் பாதுகாப்பு  மேலாண்மை செய்வதன் அவசியம் குறித்து  பேசினார். கோவையில் உள்ள மாநில  வனப்பணியாளர் உயர் பயிற்சியாக பேராசிரியர்  வித்யாசாகர், குன்னூர் பாஸ்டியர்  இன்ஸ்டியூட் இயக்குநர் சிவக்குமார்  ஆகியோர் பேசினர். விஞ்ஞானி கஸ்தூரி திலகம் நன்றி கூறினார். இந்த பயிற்சி 17ம் தேதி வரை  நடைபெற உள்ளது.

Related Stories: