திருப்பூர் மளிகைக் கடைகளில் தக்காளி ரூ.140க்கு விற்பனை

திருப்பூர், டிச. 7:  திருப்பூரில் உள்ள மளிகை கடைகளில் தக்காளி ரூ.140க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வரும் காய்கறிகளை மளிகை கடைக்காரர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள் மற்றும் சந்தைவியாபாரிகள் வந்து மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இந்நிலையில் தக்காளி வரத்து வெகுவாக குறைந்து விட்டதால், விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விட்டுவிட்டு பெய்து வரும் மழையால் தக்காளி வரத்து வெகுவாக குறைந்துள்ளது. கடந்த வாரம் 6 முதல் 7 டன் தக்காளி மட்டுமே வந்ததால் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்றது. இந்நிலையில் வரத்து மேலும் குறைந்து தற்போது உழவர்சந்தைக்கு 3 முதல் 4 டன் தக்காளி மட்டுமே வருவதாக கூறப்படுகிறது. இதனால் கிலோவுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்றது.  14 கிலோ கொண்ட பெட்டி மொத்த விலையில் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. 28 கிலோ பெரிய பெட்டி ரூ.2 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்நிலையில் இங்கிருந்து மொத்தமாக வாங்கி கடைகளில் விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் ஒரு கிலோ தக்காளியை நேற்று ரூ.140க்கு விற்றனர். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல கடைகளில் பொதுமக்கள் தக்காளியை வாங்காமல் திரும்பி சென்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தக்காளி அறுவடை சீசன் சமயத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், செடிகள் அழுகியும், காய்கள் பழுத்தும், புள்ளி விழுந்தும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளியை பறிக்க முடியாமல் செடியிலேயே முழுமையாக வீணாகியுள்ளது. இதனால் வரத்து குறைந்துள்ளது. விலையும் உயர்ந்துள்ளது, என்றனர்.

Related Stories:

More