திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே நடைமேம்பால பணி அமைக்கும் பணி தீவிரம்

திருப்பூர், டிச. 7:  திருப்பூர் புஷ்பா தியேட்டர் பஸ் ஸ்டாப் அருகே பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூர் நகரில் குறுகிய ரோடுகளில் அபரிமிதமான வாகன போக்குவரத்து காரணமாக பொதுமக்கள் பல்வேறு அவதிகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக மாநகரில் உள்ள பிரதான சாலைகளின் சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க பெண்கள், வயதானவர்கள், மாணவமாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். மேலும், பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு என்று எந்த ஒரு சந்திப்பிலும் வெள்ளை கோடுகள் (ஜீப்ரா லைன்) போடப்படவில்லை. இதனால் வாகன நெரிசல் மிகுந்த சாலையை கடக்கும் போது சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் பெரும்பாலான சாலைகளில் பாதசாரிகள் செல்வதற்கு என்று சாலையின் இருபுறமும் தனியாக நடைபாதையும் கிடையாது.

இதனால் பொதுமக்கள், சாலையோரம் வாகனம் நிறுத்துவதற்காக போடப்பட்டுள்ள வெள்ளை கோட்டை தாண்டி நடந்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள சந்திப்பு, திருப்பூர் குமரன் ரோட்டில் டவுன்ஹால் சந்திப்பு, திருப்பூர் ரயில் நிலையம் அருகே அவினாசி ரோடுபி.என்.ரோடு சந்திப்பு, தாராபுரம் ரோடுகாங்கேயம் ரோடு சந்திப்பு, காங்கேயம் ரோடு செயிண்ட் ஜோசப் பெண்கள் பள்ளி முன்பு, குமார் நகர் சந்திப்பு உள்பட 6 இடங்களில் சுமார் ரூ.4 கோடி மதிப்பில் நடைமேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணி பல்வேறு பிரச்னைகளால் கிடப்பில் இருந்த நிலையில், தற்போது, பிரச்னைகள் சரி செய்யப்பட்டு நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற துவங்கி உள்ளன. இதன்படி குமரன் ரோடு, காலேஜ் ரோடு, அவிநாசி ரோடு ஆகிய ரோடுகளை கடந்து செல்லும் பாதசாரிகள் பயன்படுத்தும் வகையில், புஷ்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே நடை மேம்பாலம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது. கடுமையான வாகன போக்குவரத்து நிறைந்த இந்த மூன்று ரோடுகளையும் கடந்து செல்வது என்பது பாதசாரிகளுக்கு மிகப் பெரிய சவாலாக உள்ளது. குறிப்பாக ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவிகள், ரோட்டின் குறுக்கில் கடந்து செல்லும் போது, சில சமயங்களில் நிலை குலைந்து விபத்துகள் ஏற்படுவதும் சகஜமாக உள்ளது. இப்பணி முடிந்து நடை மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும்போது, ரயில் பயணிகள் மற்றும் மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Related Stories: