திருமங்கலம் அருகே நெற்பயிர்கள், பூந்தோட்டங்கள் நீரில் மூழ்கின

திருமங்கலம், டிச.7: திருமங்கலம் அருகே புங்கன்குளத்தில் நெல் வயல்களில் மழைநீர் தேங்கியதால் நெல்பயிர்கள், பூந்ேதாட்டங்கள் நீரில் மூழ்கியது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை திருமங்கலம் அருகேயுள்ள புங்கன்குளம், சித்தாலை, பொன்னமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் பல ஏக்கரில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். புங்கன்குளம் கிராமத்தில் சம்பங்கி பூ, மல்லிகை பூ உள்ளிட்ட பூக்களும் ஏராளமான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். கடந்த சிலதினங்களாக பெய்த மழைநீர் வயல்வெளிகளில் சென்றுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் இந்த பகுதிகளில் உள்ள ஓடைகளில் பெருக்கெடுத்த தண்ணீர் முழுவதும் பாசனநிலங்களில் பாய்ந்து நெல்வயல் மற்றும் பூந்தோட்டத்தில் பாய்ந்தது.

இதனால் நெல்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. சம்பங்கி, மல்லிகை பூ தோட்டங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பூச்செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சிவனேஸ்வரி, வீரபாண்டி, சிவபிரகாஷ், அழகுமலை, முத்தையா கூறுகையில், `` இந்தாண்டு பருவமழை அதிகளவில் பெய்துள்ளது. ஏற்கனவே சுற்றுவட்டாரத்தில் உள்ள பொன்னமங்கலம், உரப்பனூர் கண்மாய்கள் நிரம்பியுள்ள நிலையில் நேற்று முன்தினம் இரவு விடிவிடிய பெய்த மழையால் காட்டாற்று தண்ணீர் ஓடைகளின் வழியாக வந்து வயல்வெளிகளில் பாய்ந்துள்ளன. எங்கள் புங்கன்குளம் கிராமத்தில் மட்டும் 60 ஏக்கர் வரையில் நெல்பயிரிட்டுள்ளோம். அருகேயுள்ள பொன்னமங்கலம், உரப்பனூர், சித்தாலையில் கூடுதலாக 100 ஏக்கர் வரையில் நெல் பயிரிட்டுள்ளனர். காட்டாற்று தண்ணீரால் நெல்பயிர்கள் நீரில் மூழ்கி காட்சியளிக்கின்றன. பூந்தோட்டத்திலும் தண்ணீர் நிற்பதால் அடிபுறத்தில் கிழங்கு அழுகி பலத்த சேதங்களை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். அதிகாரிகள் பாதிப்புகளை கணக்கெடுத்து உரிய இழப்பீடுகளை வழங்கவேண்டும்’’ என்றனர்.  

Related Stories:

More