சப்ஜெயிலில் புகுந்த மழைநீர்

உத்தமபாளையம், டிச. 7: உத்தமபாளையத்தில் உள்ள சப்ஜெயிலில் மழைநீர் புகுந்ததால், கைதிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். உத்தமபாளையத்தில் சப்ஜெயில் உள்ளது. இந்த சிறைச்சாலை மிகவும் பழமையானதாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு உத்தமபாளையத்தில் கனமழை கொட்டியது.

இதனால், மலைப்பகுதிகளிலும், நீர்வரத்து ஓடைகள் வழியாக வந்த காட்டாற்று வெள்ளம் சப்ஜெயிலுக்குள் புகுந்தது. இதனால், இரவு நேரத்தில் சிறைக் காவலர்கள் உடனடியாக கைதிகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று உள்ளேயே அடைத்தனர். இதனால் இரவில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் சிறைக்குள்ளே தண்ணீர் வந்ததால் கைதிகள் மிகவும் அச்சம் அடைந்தனர். சப்ஜெயிலுக்கு பின்புறம், மழை பெய்தால் வழிந்தோட கால்வாய் இல்லை. சாக்கடை தண்ணீர் செல்ல மிகப்பெரிய ஓட்டை இருந்தது. இதன்வழியே காட்டாற்று தண்ணீர் புகுந்தது. எனவே, இதனை முழுவதுமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: