3 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் சென்னையில் கஞ்சா விற்ற 107 பேர் கைது: 53 கிலோ கஞ்சா, 3 பைக்குகள் பறிமுதல்

சென்னை:  சென்னையில் 3 நாட்கள் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக 68 வழக்குகள் பதிவு செய்து ரவுடிகள் உட்பட 107 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 53 கிலோ கஞ்சா, 3 பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையில் அதிகளவில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி விற்பனை செய்வதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு தொடர் புகார்கள் வந்தன. அந்த புகாரின்படி போதை தடுப்புக்கான நடவடிக்கையின்படி கஞ்சா விற்பனை மற்றும் கடத்தி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் 12 காவல் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி அனைத்து காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அந்தந்த காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்கியாக, கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை 3 நாட்கள் சென்னை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். குறிப்பாக, பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லையில் உள்ள பெரும்பாக்கம் சர்ச் சந்திப்பு அருகில் நேற்று முன்தினம் இரவு உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசர் தலைமையிலான போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மாதவரம் மாத்தூர் 3வது மெயின் ரோட்டை சேர்ந்த எபினேசர் (எ) காளிதாஸ் (21), பள்ளிக்கரணை கோவலன் நகரை சேர்நத் விக்னேஷ் (22) ஆகியோரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ததாக சென்னை முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 68 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரவுடிகள் உட்பட 107 குற்றவாளிகள் கைது செய்ய்பபட்டனர். மேலும் அவர்களிடமிருந்து ₹5 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 53 கிலோ 213 கிராம் கஞ்சா மற்றும் 3 இருசக்கர வாகனங்கள், ₹2,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: