செங்கம் அருகே பரபரப்பு பள்ளிக்கு பூட்டு போட்டு பெற்றோர்கள் எதிர்ப்பு தொடக்க பள்ளியில் ஒரே ஆசிரியர் பணிபுரிவதை கண்டித்து

செங்கம், டிச.7: செங்கம் அடுத்த மேல் கரியமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை சுமார் 80 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லையாம். மேலும் போதிய ஆசிரியர்கள் நியமிக்கபடவில்லை என கூறப்படுகிறது. ஒரே ஆசிரியர் மட்டும் பணி புரிவதால் மாணவ, மாணவிகளுக்கு போதிய அளவில் பாடம் நடத்தப்படவில்லை. இதனால் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாமல் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியில் நின்று பூட்டு போட்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த செங்கம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து பெற்றோர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் தொடர்ந்து புறக்கணித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவர்களிடம் மாற்று ஏற்பாடு செய்வதாக போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து, பள்ளியின் பூட்டை திறந்து பள்ளிக்குள் குழந்தைகளை பெற்றோர்கள் அனுப்பி வைத்தனர்.

Related Stories: