விருத்தாசலம், திட்டக்குடியில் தனித்தனி விபத்தில் சிறுவன், வாலிபர் பலி

விருத்தாசலம், டிச. 7:     விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்த சற்குணம் மனைவி மஞ்சுளா (30). இவரது மகன் அஜய்(8), மகள் அஜிதா (2). அதே பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மனைவி செந்தாமரை (43) ஆகிய 4 பேரும் நேற்று 6.30 மணியளவில் தே.கோபுராபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர். செம்பளக்குறிச்சியில் இருந்து தே.கோபுராபுரம் நோக்கி மதுபோதையில் செம்பளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் ராஜேஷ்குமார் (19), அவரது நண்பர்களுடன் பைக்கில் அதிவேகமாக வந்துள்ளார். அப்போது சாலையோரமாக நடந்து சென்ற மஞ்சுளா, அஜித், அஜிதா, செந்தாமரை ஆகியோர் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் அஜய் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தான். மற்ற மூவரும் படுகாயமடைந்தனர்.  

 அருகில் இருந்தவர்கள் சிறுவன் அஜய் மற்றும் காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில்  சேர்த்தனர். அங்கு சிறுவன் அஜய்யை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர்.  படுகாயமடைந்த மூவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய பொதுமக்கள் விரட்டினர். இதில், ராஜேஷ்குமார் மட்டும் பிடிபட்டான். இதையடுத்து, விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.  அரசு பேருந்து மோதி இளைஞர் பலி: கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் ரமேஷ் (22). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் மேல் பட்டப்படிப்பு படித்து வந்தார். நேற்று ராமநத்தம் அடுத்துள்ள எழுத்தூர் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை பைக்கில் கடந்துள்ளார்.

அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரமேஷ் சம்பவ இடத்தில் இறந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ராமநத்தம் போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தாய் லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: