ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முடியாததால் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி தற்கொலை முயற்சி

கள்ளக்குறிச்சி, டிச. 7:  ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முடியாததால் கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த  முத்துசாமி மகன் கோவிந்தராஜு, விவசாயி. எலவடி கிராம பகுதியில் 2011ம் ஆண்டு விவசாய நிலம் கிரையம் செய்துள்ளார். ஆனால் இவரது 35 சென்ட் நிலத்தை ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. பல்வேறு முயற்சிகள் செய்தும் நிலத்தை மீட்க முடியாததால் மன  உளைச்சலில் இருந்துவந்த கோவிந்தராஜு நேற்று தனது மனைவியுடன்  கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்கவந்தார். அப்போது தான்  மறைத்து கொண்டு வந்த கேனில் இருந்த  மண்ணெண்ணெய்யை கோவிந்தராஜு தனது  உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு  பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி தண்ணீர் ஊற்றினர்.  இதுபற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராஜலட்சுமி மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர்.

பின்னர் கோவிந்தராஜை காவல்  நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர்  கோவிந்தராஜு மனைவி மற்றும் உறவினர்கள்  இதுசம்மந்தமாக மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கமுடியாததால் விரக்தியடைந்த விவசாயி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம்  கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Related Stories: