ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் மாவட்டம் முழுவதும் 166 குற்றவாளிகள் சிக்கினர்: துப்பாக்கி, கத்தி, கஞ்சா பறிமுதல்; போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார் `ஸ்டாமிங் ஆபரேஷன்’ நடத்தி 166 குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடம் இருந்து துப்பாக்கி, கத்தி, கஞ்சாவை அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் `ஸ்டாமிங் ஆபரேஷன்’ நடத்தவேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டார். அதன்படி, கூடுதல் போலீஸ் எஸ்பிக்கள் ஜெசுராஜ், மீனாட்சி ஆகியோர் மேற்பார்வையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் முதல் நேற்று அதிகாலை வரை `ஸ்டாமிங் ஆபரேஷன்’ அதிரடியாக நடத்தப்பட்டது.

இந்நிலையில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 166 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த 21 பேர், கூடுதல் விலைக்கு மதுவிற்பனை செய்த 60 பேர், தடைசெய்யப்பட்ட குட்கா வைத்திருந்த 63 பேர், கஞ்சா விற்ற 2 பேரை கைது செய்தனர். மேலும், ஏற்கனவே கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட 20 ரவுடிகளையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த ஆபரேஷனில் ஒரு நாட்டு துப்பாக்கி, 16 கத்திகள், 37 கிலோ குட்கா, 400 கிராம் கஞ்சா மற்றும் 337 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

More