உள்ளாட்சி தேர்தல் பணியின்போது மரணமடைந்த ஆசிரியர் குடும்பத்துக்கு நிதியுதவி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் நெய் குப்பம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தவர் கே.ஹரி (47). கடந்த மாதம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது.

இதையொட்டி ஹரி, தாங்கி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் தேர்தல் பணிக்கு சென்றார். அப்போது, ஏற்பட்ட பிரச்னைகள் மற்றும் மன அழுத்தத்தால் ஹரி, திடீரென மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் அனுமதித்தபோது, அங்கு ஹரி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்நிலையில் அவரது குடும்பத்தினருக்கு, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கம் மற்றும் வாலாஜாபாத் வட்டார ஆசிரியர்கள் இணைந்து ரூ.5 லட்சம் நிவாரண நிதியை, அவரது மனைவி நளினியிடம் வழங்கினர். அப்போது, மாவட்ட செயலாளர் ரமேஷ், வாலாஜாபாத் வட்டார தலைவர் காமாட்சி, வட்டார பொருளாளர் மோகனசுந்தரம் உள்பட ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பலர் இருந்தனர். மேலும் தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியர் குடும்பத்துக்கு தேவையான உதவிகள் மற்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு உடனடியாக பணி வழங்க  தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: