அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படாத அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் அமைச்சர் ஆய்வு

ஆவடி, டிச.6:  கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்காததால் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அயப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு சுமார் 425 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த குடியிருப்பானது 1994ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில் 18 ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடுகளும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு சுமார் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த குடியிருப்புகளில் உள்ள வீடுகள் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீட்டுவசதி வாரிய பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்கிறது. அங்கு இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றில் விடப்படுகிறது.

இந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 7 ஆண்டுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இதன் கொள்ளளவு 7 மில்லியன் லிட்டர். சுத்திகரிப்பு நிலையம் கடந்த சில ஆண்டுகளாக சரிவர பராமரிப்பதில்லை. இங்கு உள்ள கழிவுநீரை வெளியேற்றுவதற்கு போதுமான மின்மோட்டார் வசதி கிடையாது. இதனையடுத்து, வீடுகளிலிருந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் தத்தளிக்கிறது. மேலும், வீட்டுக்குள்ளே கழிவுநீர் வெளியேறுகிறது. சில தெருக்களில் உள்ள மேன்ஹோலில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம்போல் தேங்கி நிற்கின்றன. தற்போது, பெய்த தொடர் மழையால்  கழிவுநீருடன் மழைநீரும் கலந்து தெருக்களில் ஆறாக ஓடுகிறது. இதனால், அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து குடியிருப்புவாசிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகார்கள் அனுப்பினர். இதனையடுத்து, அவர் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் சு.முத்துசாமியை ஆய்வு செய்து பிரச்னைகளை தீர்க்க உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அமைச்சர் முத்துசாமி துறை அதிகாரிகளிடம் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்கு சொந்தமான பாழடைந்த கட்டிடங்கள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, வீட்டு வசதி வாரியத் துறை  மேலாண்மை இயக்குனர் சிறு, மதுரவாயல் தொகுதி எம்எல்ஏ கணபதி,  வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளரும், அயப்பாக்கம் ஊராட்சி தலைவருமான  துரை.வீரமணி, ஒன்றிய குழு தலைவர் கிரிஜா, துணைத்தலைவர் ஞானப்பிரகாசம்,  ஒன்றிய ஆணையாளர் பாலசுப்பிரமணியம், ஒன்றிய கவுன்சிலர் வினோத், ஊராட்சி  துணைத்தலைவர் யுவராஜா மற்றும் வார்டு உறுப்பினர்கள், குடியிருப்பு சங்க  நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தற்காலிக தீர்வு

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது, `வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த மழை காலத்திற்குள் தெருக்களில் கழிவுநீர் தேங்காதவாறு சுத்திகரிப்பு நிலையங்கள் மேம்படுத்தப்படும். அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காண துறை அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இனி வருங்காலங்களில் வீட்டு வசதி வாரியம் சார்பில்  கட்டப்படும் குடியிருப்புகளை ஒவ்வொரு பகுதியாக பொறியாளர்கள் ஆய்வு செய்து, அதில் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக நிறுத்தப்படும். கட்டி முடிந்த பிறகு நடவடிக்கை எடுப்பது என்பது பேச்சுக்கே இடமில்லை. இதற்கு முன்பு கட்டிய கட்டிடங்களில் குறைபாடுகள் இருப்பின் அதனையும் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல் குடியிருப்புகளை கட்டும் ஒப்பந்ததாரர்கள் தரத்துடன் கட்ட வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Related Stories: