ராஜபாளையம் அருகே ரேஷன் கடைக்குள் கண்மாய் நீர் புகுந்தது

ராஜபாளையம், டிச. 6: ராஜபாளையம் அருகே உள்ள சமுசிகாபுரம் வாகைகுளம் பகுதியில்  கீழக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் நிறைந்து   வாகைக்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதனால் தரைப்பாலம் சேதமடைந்து  தண்ணீர் அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக சமுசிகாபுரம் பகுதியில் இருந்து ராமலிங்கபுரம், முதுகுடி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் பொதுமக்கள் செல்ல காவல்துறை அனுமதிக்கவில்லை. மேலும் இந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வினியோகம் செய்வதற்காக அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் போன்ற 5 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால், மழைநீர் உள்ளே புகுந்ததால்  அனைத்துப் பொருட்கள் நீரில் மூழ்கி வீணானது. மேலும் பெண்கள் சுகாதார வளாகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவை தண்ணீரில் மூழ்கியுள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல், வீடுகளுக்குள்ளும் தண்ணீர் செல்வதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More