கோம்பை பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் வேண்டும்

தேவாரம், டிச.6: கோம்பை  பேரூராட்சியில் நிர்வாகப் பணிகள் அடியோடு முடங்கி கிடக்கிறது. எனவே நிரந்தரமாக பேரூராட்சி செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோம்பை பேரூராட்சியில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். 15 வார்டுகள் இங்கு உள்ளன. விவசாய கூலி தொழிலாளர்கள்   அதிகமாக வாழ்கின்றனர். வளர்ந்து வரக்கூடிய இப்பேரூராட்சியில், அடிப்படை கட்டமைப்புகள் கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாமல் உள்ளது.  குறிப்பாக குடிநீர் வசதி,  தெருவிளக்கு,  தார் ரோடு, சாக்கடை வசதி உள்ளிட்டவை  அதிக அளவில் தேவைப்படுகிறது. அன்றாடம் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது. எனவே நிர்வாக பணிகள் தொய்வின்றி நடப்பதற்கு பேரூராட்சி செயல் அலுவலர்கள் பணி மிகவும் முக்கியமானதாக  கருதப்படுகிறது.

செயல் அலுவலர்கள் இல்லாதபோது, அன்றாட  வளர்ச்சித் திட்டப் பணிகள் அடியோடு பாதிக்கப்படுகிறது.  கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இங்கு 7  பேரூராட்சி செயல் அலுவலர்கள்  பணியாற்றி உள்ளனர்.  குறிப்பாக பேரூராட்சி செயல் அலுவலராக இங்கு இருந்த  ஜெயலட்சுமி ஒன்றரை  வருடங்களுக்கு மேல் பணி புரிந்து  மாற்றப்பட்டார்.  இங்கு கூடுதல் பொறுப்பாக பேரூராட்சி செயல் அலுவலர்களாக திருமலை குமார், பசீர் அகமது, குலோத்துங்கன் உள்பட ஏழு பேர் வரை வந்தும் நிரந்தரமில்லாமல் சென்றுவிட்டனர்.  

தற்போது கூடுதல் பொறுப்பாக இளங்கோவன் என்பவர்  பணியாற்றி வருகிறார். நிரந்தரமாக இரண்டு செயல் உள்ளவர்கள் நியமிக்கப்பட்டும், வேறு மாவட்டம் என்பதால் வரவில்லை. இதில் சோமசுந்தரம் என்பவர்  ஒரே மாதத்தில் மாறுதல் பெற்றுச் சென்று விட்டார். இதனால் நிர்வாகப் பணிகள் அடியோடு முடங்கி கிடக்கிறது.  எனவே இங்கு நிரந்தரமாக பேரூராட்சி செயல் அலுவலர் நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளாக பிறப்பு, இறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு,  பேரூராட்சி டவுன் பிளான் என  பல்வேறு பணிகளுக்காக வருகின்றனர். ஆனால் பணிகள்  நடப்பதில்லை. இதனால் பொதுமக்கள் விரக்தி அடைந்த நிலையில்  உள்ளனர். எனவே தேனி மாவட்ட கலெக்டர் நிர்வாக விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு முன் வரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: