தொடர் ஆக்கிரமிப்புகளால் நீரின்றி வறண்டு கிடக்கும் சருகணியாறு மழை பெய்தும் தண்ணீர் ஓடவில்லை

சிவகங்கை, டிச.6: சிவகங்கை மாவட்டத்தில் கண்மாய்கள் நிறைந்து மறுகால் செல்லும் நிலையில் சருகணியாறு வறண்ட நிலையில் உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மணிமுத்தாறு, பாலாறு, சருகணியாறு, நட்டாறு கால்வாய், வைகையாறு, உப்பாறு, பாம்பாறு, தேனாறு, விருசுழியாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பெயரளவில் சுமார் ஒன்பது ஆறுகள் இருந்தாலும் இவைகளில் சிலவற்றில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகப்படியான மழை பெய்யும் காலங்களில் மட்டுமே நீர் செல்லும். இதில் வைகையாற்றில் மட்டும் வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படும் போது சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வரை நீர் செல்கிறது. இந்த ஒன்பது ஆறுகளில் பெரும்பாலானவை கண்மாய்களில் தொடங்கி ஓர் ஆற்றுடன் மற்றொன்று சேரும் வகையில் உள்ளன. கண்மாய்கள் நிறைந்தாலும் ஆற்றின் மூலம் பிற கண்மாய்களுக்கு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

50 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணைகள், சிறிய அணைகள், பாலங்கள், தரைப்பாலங்கள், மடைகள், கலுங்குகள் என நீர் முற்றிலும் வீணாவதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கும், கண்மாய்களுக்கும் இடையே பல்வேறு கட்டுமானப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆறுகளில் ஆக்கிரமிப்பு, புதர்கள், சீமைக்கருவேல மரங்கள் முளைத்து நீர் வழிப்பாதைகள் இல்லாமல் போனதால் ஆறுகள் அனைத்தும் அடையாளமே இல்லாமல் அழிந்து வருகின்றன. சிவகங்கை அருகே பெருங்குடியில் தொடங்கும் சருகணியாறு வீழனேரி, பாகனேரி, நடராஜபுரம், காளையார்கோவில், சருகணி வழி ராமநாதபுரம் மாவட்டம் செல்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் கண்மாய்கள் நிறைந்து மறுகால் செல்லும் நிலையில் சருகணியாறு நீரில்லாத ஆறாக காட்சியளிக்கிறது.

பெருங்குடி கண்மாயின் 84வது மீட்டரில் கலுங்கு அமைக்கப்பட்டு அங்கிருந்து இந்த ஆறு தொடங்குகிறது. ஆனால் கலுங்குப்பகுதி முற்றிலும் சிதைந்து போன நிலையில் உள்ளது. ஆற்றின் பெரும்பாலான பகுதிகள் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சுமார் 100 கிராமங்களுக்கும் மேல் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கொடுத்த சருகணியாறு தற்போது கால்வாய் அளவில் கூட இல்லாமல் அழிந்து வருகிறது. இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த ஆறு சருகணி வரை சென்று அங்கு நாட்டார் கால்வாயுடன் இணைந்து ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு செல்கிறது. ஏராளமான கண்மாய்களுக்கு நீர் கொடுத்த ஆறு தற்போது அடையாளம் இல்லாமல் உள்ளது. இப்பகுதியில் விவசாயம் அழிந்ததற்கு ஆறுகள் அழிந்து வருவதும் காரணம். சருகணியாறின் நீர் வழிப்பகுதி மாற்றப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சருகணியாற்றின் நீர் வழித்தடங்களை மீட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories:

More