100 பவுன் நகையை தர மறுப்பு: நான்கு பேர் மீது வழக்கு

ராமநாதபுரம், டிச.6:  மருமகளின் 100 பவுன் நகை, 1 கிலோ பொருட்களை திரும்ப தர மறுப்பதாக மாமனார் குடும்பம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ராமநாதபுரம் வெளிபட் டணம் பகுதியைச் சேர்ந்த மனோகரன் மகள் வித்ய லட்சுமி(31). பரமக்குடியைச் சேர்ந்த ராகவன் மகன் வினோத்(35). இவர்களுக்கு கடந்த 2012 ஆக.29ல் நடந்த திருமணத்தின்போது 100 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பாத்திரங்கள் சீர் பொருட்களாக கொடுக்கப்பட்டது. பரமக்குடியில் 7 மாதம் கூட்டு குடும்பமாக இருந்தபோது நகை, வெள்ளி உள்ளிட்ட சீர் பொருட்களை வினோத்பெற்றோர் வாங்கி வைத்திருந்தனர்.

இதன் பின்னர் தனியாக குடியேறிய வினோத், மதுரையில் கடை நடத்த முடிவு செய்தார். அதற்கு தனது 100 பவுன் நகை, 1 கிலோ வெள்ளி பொருட்களை தருமாறு வித்யலட்சுமி கேட்டார். அவர்கள் தர மறுத்தனர். இந்நிலையில், 2019 செப்.9ல் வினோத் இறந்து விட்டார். 5 வயது மகனுடன் சிரமமாக வாழ்ந்து வரும் நிலையில், மாமனாரிடமிருந்து நகை, வெள்ளி பொருட்களை பெற்றுத்தருமாறு உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் வித்யலட்சுமி வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, ராகவன்(58), இவரது மனைவி லட்சுமி பிரபாவதி(53), மகள் பவித்ரா(32), மருமகன் பிரசன்ன வெங்கடேஷ்(38) ஆகியோர் மீது ராமநாதபுரம் மகளிர் போலீஸ் எஸ்ஐ ஹெலன் ராணி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories:

More