கொரோனா தடுப்பூசி செலுத்த மையங்களில் குவிந்த மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை அச்சம் எதிரொலி

மதுரை, டிச. 6: பொது இடங்களில் செல்ல தடைவரும் என்ற அச்சத்தில் மதுரை மாவட்டத்தில் நேற்று தடுப்பூசி மையங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து, தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.  கொரோனா 3வது அலையை தடுக்கவும்,  ஒமிக்ரான் தடுப்பு முன்னெச்சரிக்கையாகவும் மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 19க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த மார்ச் 15 முதல் நேற்று வரை 16 லட்சத்து 60 ஆயிரத்து 630 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 54 ஆயிரத்து 186 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், 53 ஆயிரத்து 444 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 26 லட்சத்து 43 ஆயிரத்து 416 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 4 லட்சத்து 19 ஆயிரத்து 180 டோஸ் மருத்து கையிருப்பில் உள்ளது.

தடுப்பூசி தொடர்பாக தீவிர விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இவ்வாரம் 2 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. அதில், தடுப்பூசி  செலுத்தாதவர்கள் பொது இடங்களில் செல்வதற்கு அனுமதி  இல்லை என்ற நிலை வரப்போகிறது. இது தொடர்பாக மாவட்ட  நிர்வாகத்தால் மறைமுக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் பலமுறை அழைத்தும் தடுப்பூசி முகாமிற்கு பொதுமக்கள் வரமறுத்தனர். இதனால், பல முகாம்கள் வெறிச்சோடிக் காணப்பட்டது. இந்நிலையில், பொது இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை என்ற அறிவிப்பு வந்துவிடும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதனால், இதுவரை ஊசி போடாமல் இருந்த பலர் மதுரை அரசு மருத்துவகல்லூரியில் உள்ள மையம், மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையம், கிராமப்பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையத்தில் நேற்று தடுப்பூசி போட குவிந்தனர். இதனால், ஒரு சில மையங்களில் நேற்று காலையிலேயே தடுப்பூசி டோஸ் தீர்ந்தது.

Related Stories: