கர்ப்பிணி நாய்க்கு வளைகாப்பு மதுரை எஸ்ஐ வீட்டில் நெகிழ்ச்சி

மதுரை, டிச. 6:மதுரையில் போலீஸ் அதிகாரி குடும்பம் டாபர்மேன் நாய்க்கு வளைகாப்பு நடத்திய சம்பவம் விநோதத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலைய எஸ்ஐ சக்திவேல். இவர், 3 ஆண்டுகளுக்கு முன்பு டாபர்மேன் வகையைச் சார்ந்த பெண் நாயை வாங்கி, அதற்கு சுஜி என பெயரிட்டு வீட்டில் வளர்த்து வருகிறார். குடும்பத்தினரும் நாயை பராமரித்து வருகின்றனர். சுஜி தற்போது நிறைமாத கர்ப்பமாக உள்ளது. அதற்கு வளைகாப்பு நடத்த குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து சக்திவேல் கலர், கலராய் வளையல்களை வாங்கி வந்தார். அவற்றை குடும்பத்தார் சுஜிக்கு அணிவித்து மகிழ்ந்தனர்.

பின்னர் நாய்க்கு மலர் மாலை அணிவித்து, நெற்றியில் குங்குமமிட்டு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில், உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் கலந்து கொண்டனர். செல்லப்பிராணிக்கு வளைகாப்பு நடத்தி முடித்தவுடன், விருந்தினர்களுக்கு வாழையிலையில் 5 வகையான உணவுகளை பரிமாறி விருந்து வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி பொதுமக்களை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

Related Stories:

More