தூய்மை பாரதம், தலைக்கவசம் வலியுறுத்தி எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் டூவீலர் விழிப்புணர்வு பயணம் கொல்கத்தாவிலிருந்து மதுரை வந்தனர்

மேலூர், டிச. 6: கொல்கத்தாவிலிருந்து டூவீலர் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் நேற்று மதுரை மேலூர் வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், கடந்த நவ.28ல் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் டூவீலர் விழிப்புணர்வு பயணத்தை கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். இதில், 175 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், 7 பிரிவுகளாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுமார் 20 ஆயிரம் கிமீ., பயணம் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில், கர்னல் விவேக்குப்தா தலைமையில், கேப்டன் பெருமாள் உட்பட 25 பேர் குழு மதுரைக்கு நேற்று வந்தது. இவர்களுக்கு மேலூர் அருகில் கொடிக்குளத்தில் உள்ள பாரத் பெட்ரோலிய பிரதேச மேலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ரீடெயில் மேலாளர்கள் அஷ்வின், மோகன், சரவணன் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் கூறுகையில், ‘தூய்மை பாரதம், தலைக்கவசம், சாலை விதிகள் உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘பார்டர் ரோடு ஆர்கனேசஷன்’ குறித்த முக்கியத்துவத்தை பொதுமக்கள் தெரிந்து கொள்ள இந்த பயணத்தை மேற்கொண்டிருப்பதாக, தெரிவித்தனர்.

 இதை தொடர்ந்து கொட்டும் மழையை பொருட்படுத்தாமல், தங்கள் விழிப்புணர்வு பயணத்தை வீரர்கள் தொடர்ந்தனர். மேலூர் அருகே, கொடிக்குளத்தில் டூவீலர் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கிய எல்லை பாதுகாப்பு வீரர்கள்.

Related Stories: