மதுரை அவனியாபுரத்தில் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த மழைநீர்

அவனியாபுரம், டிச. 6: அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கண்மாய் நீர் சூழ்ந்ததால், பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட வெளியே வரமுடியாமல் அவதிப்படுகின்றனர்.  தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகின்றன. பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் உள்ள பெரியசாமி நகரில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் பெய்த கனமழையால் அவனியாபுரம் புதுக்குளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த தண்ணீர் பெரியசாமி நகர் பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை சூழ்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். தங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்கக் கூட முடியவில்லை என கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை தமிழர் முகாமில் வீடுகள் இடிந்தன:

திருமங்கலம்  அருகே உள்ள உச்சப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது.  இதில், இலங்கை தமிழர்கள் 1500 பேர் வசித்து வருகின்றனர்.  கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், முகாமுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. பராமரிப்பின்றி பலரது வீடுகளில் கட்டிடங்கள் மோசமாக  காட்சியளிக்கின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் முகாமில் மஞ்சுளா (38) என்பவரது வீட்டுச்சுவர்  இடிந்து விழுந்து. இதில், அவரது மகன் தீபன் (16) காயமடைந்தார். இதே போல்  தவமணிதேவி (67) என்பவரது வீடும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயமில்லை. இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி  சேத விவரங்களை கணக்கிட்டு வருகின்றனர்.

Related Stories: