மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடப்பது எப்போது பணிகளை தொடங்க பக்தர்கள் கோரிக்கை

மதுரை, டிச. 6: மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் கும்பாபிஷேகப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மதுரையில் உலகபிரசித்தி பெற்ற மீனாட்சியம்மன் கோயில் உள்ளது. 15 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலில் 8  கோபுரங்கள், 2 விமானங்கள் உள்ளன. இங்குள்ள கருவறை  விமானங்கள், இந்திர விமானங்கள் என அழைக்கப்படுகின்றன. 32 கற்சிங்கள்,  64 சிவகணங்கள், 8 வெள்ளை யானைகள் ஆகியவை கருவறை விமானங்களை தாங்குகின்றன. கோயில் கிழக்கு மேற்காக 847 அடி, தெற்கு வடக்காக 792 அடி நீளம் உடையது.  ஆடிவீதிகளில் 4 புறமும் 9 நிலைகளை உடைய 4 கோபுரங்கள் உள்ளன. கடந்த 2018 பிப்.2ல் ஏற்பட்ட தீவிபத்தில் வீரவசுந்தராயர் மண்டபம் இடிந்ததால் முற்றிலும்  அகற்றப்பட்டது. விபத்து நடந்த பகுதிகளை பழமை மாறாமல், ஆகம விதிப்படி  புனரமைக்க ரூ.18 கோடி நிதியை அரசு ஒதுக்கியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம்:கோயிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். இதன்படி, 2009ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில், 2021-2022ல் கும்பாபிஷேகம் நடத்த  வேண்டும். ஆனால், தீ விபத்து சீரமைக்கும் பணி தாமதமாகி வருகிறது. கும்பாபிஷேக பணி சீரமைப்பு பணிக்கு 2 ஆண்டு ஆகும். தற்போது பணி தொடங்காத நிலையில் 2022ல் கும்பாபிஷேகம் நடத்த  வாய்ப்பு இல்லை. கோயில் வளாகத்தில் உள்ள அம்மன், சுவாமி  தலங்கள் மற்றும் மண்டபங்கள், சுற்றுச்சுவர்கள், மாடிப்பகுதிகள் முழுவதும் மழையால், தண்ணீர் இறங்கிறது. இதனால், கோயில் அலுவலகம் பகுதியில் உள்ள கோப்புகள்  சேதம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த அதிமுக ஆட்சி காலங்களில் கோயிலில்  பராமரிப்பு பணி மற்றும் கும்பாபிஷேக பணிகளை தொடர முன்வரவில்லை. தற்போது புதிய ஆட்சி பொறுப்பேற்றவுடன் தீவிபத்து பணிகள் மற்றும்  கும்பாபிஷேக பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க உத்தரவிட்டுள்ளது. எனவே,  விரைவில் கும்பாபிஷேக பணிகள் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே கோயில் முழுவதும்  உள்ள பகுதிகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories: