மண்வளத்தை பாதுகாக்க இயற்கை விவசாயத்திற்கு திரும்ப வேண்டும்

ஊட்டி, டிச. 6:  ஊட்டியில் உள்ள தோட்டக்கலை வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில்  உலக மண்வள தினம் நேற்று நடந்தது. உவர் நிலமாவதை தடுப்போம், உற்பத்தியை பெருக்குவோம் என்ற தலைப்பில் விழா நடந்தது. தோட்டக்கலை இணை இயக்குநர் ஷிபிலா மேரி வரவேற்றார்.

கலெக்டர் அம்ரித் தலைமை வகித்து பேசியதாவது: நீலகிரியில் நாம் 50 ஆண்டுக்கு முன்பு செய்த விவசாயமும், தற்போது செய்து வரும் விவசாயமும் ஒன்றல்ல. இதற்கு மக்கள்தொகை பெருக்கம், கட்டிடங்கள் அதிகரிப்பு, சுற்றுலா பயணிகள் வருகை போன்ற காரணங்களால் குப்பைகள் அதிகரித்துள்ளன.

இந்த காரணங்களால் விவசாயம் மட்டுமின்றி மண் வளமும் பாதிப்படைந்துள்ளது. மண் வள பாதிப்பை சரி செய்ய பல்வேறு நுட்பங்களை விஞ்ஞானிகளும், வேளாண் துறை சார்ந்த அதிகாரிகளும் பரிந்துரைத்து வருகின்றனர். அவர்கள் பரிந்துரைக்கும் முறைகள் ஏற்கனவே நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தவை. பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றினால் மட்டுமே நமது மண் வளத்தை பாதுகாக்க முடியும். நம் மாவட்டம் இயற்கை விவசாயம் மேற்கொள்வதில் முன்னோடி மாவட்டமாக உள்ளது. தேசிய அளவில் முன்னோடியாக மாற வேண்டியது அவசியம். அதற்கு அரசு முழுமையாக ஆதரவை அளிக்கும். அரசு மானியங்கள் முறையாக கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 

மண் வளத்தை பெருக்க இயற்கை விவசாயம் மேற்கொள்ள விவசாயிகள் முன்வர வேண்டும். வருங்கால தலைமுறையினரின் ஆரோக்கியத்திற்கு அதுவே உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

ஊட்டி இந்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மைய தலைவர் கண்ணன் பேசியதாவது:

நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாகவே 6 மாதங்கள் பெய்ய வேண்டிய மழை குறைந்த நாட்களில் பெய்கிறது. காலநிலை மாறுபாடே இதற்கு காரணம். கொட்டி தீர்க்க கூடிய மழையால் ஆண்டுக்கு ஒரு ஹெக்டர் நிலத்தில் 40 டன் மேல் அடித்து செல்லப்படுகிறது. இதனால் மண் வளம் பாதிக்கிறது. இதுமட்டுமின்றி படிமட்ட விவசாயத்தை தவிர்த்து விவசாயிகள் சரிவுகளில் விவசாயம் மேற்கொள்வதும் ஒரு காரணம்.  அடித்து செல்லப்படும் மண் நீலகிரியில் உள்ள அணைகளில் படிந்து அவற்றையும் பாதிக்கிறது. செங்குத்து முறையில் படிமட்டம் அமைப்பதை தவிர்த்து, சரிவு படிமட்டம் அமைக்க வேண்டும். படிபட்ட சரிவுகளில் டீ, நேப்பியர் புற்கள் போன்றவற்றை நடவு செய்ய வேண்டும். இதன் மூலம் மண் அரிப்பு தவிர்க்கப்படும். படிமட்டம் அமைக்க ஜேசிபி இயந்திரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கை முறையில் புற்களை கொண்டு படிமட்டம் அமைக்க வேண்டும்.

 

ஓட்ஸ், லூபின், கடுகு போன்ற மூடாக்கு பயிர்களை பயிரிட்டு அவற்றின் மீது டிரேக்டர் கொண்டு உழவு செய்த பின் விவசாயம் செய்வதாலும் மண் வளம் பெறும். இவ்வாறு அவர் பேசினார்.  முன்னதாக, மண் பரிசோதனை நிலையம், மண் வள ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலைத்துறை ஆகியவை சார்பில் இயற்கை உரங்கள், காய்கறிகள், மண்பரிசோதனை குறித்த விவரங்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. இவற்றை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டார். விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளையும் வழங்கினார். இதில் பூங்கா உதவி இயக்குநர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: