கோவையில் பூட்டிய வீடுகளில் மின் கணக்கீடு செய்ய முடியாமல் கணக்கீட்டாளர்கள் அவதி

கோவை, டிச.6: கோவையில் பூட்டிய வீடுகளில் மின் கணக்கீடு செய்ய முடியாமல் கணக்கீட்டாளர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கோவையில் உள்ள வீடுகளில் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் பயன்பாடு குறித்து மின் கணக்கீடு செய்ய கணக்கீட்டார்கள் செல்லும் போது பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால், மின் கணக்கீடு செய்ய முடியாமல் உள்ளனர். இதனால், கடந்த மாத கட்டணத்தை செலுத்தும் வகையில் கதவு பூட்டப்பட்டு உள்ளது என கூறி கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனர்.

 

மேலும், முந்தைய மின் பயன்பாட்டை விட தற்போது குறைவான மின் பயன்பாடு இருப்பதால் கட்டணம் குறைவாகவே இருக்கும். ஆனால், கணக்கிட்டார்கள் வரும் போது கதவு பூட்டப்பட்டு இருப்பதால் பழைய கட்டணத்தை செலுத்தும் நிலை ஏற்படுகிறது.  இந்நிலையில், வேலைக்கு செல்லும் வீடுகளில் மின் மீட்டர்கள் பெரும்பாலும் வீட்டின் உட்புறமாக இருப்பதால் வேலைக்கு சென்ற பின் கேட் பூட்டப்பட்டு இருப்பதால் மின் கணக்கீட்டாளர் மின் இணைப்பு எண் தெரியாமலும், பயன்பாட்டுக் கட்டணம் கணக்கெடுக்க முடியாத நிலையில் அவதிப்படுகின்றனர்.

ஒவ்வொரு இரண்டு மாதமும் இதே நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை போக்கும் வகையில் அந்தந்த வீட்டில் முன்புறமுள்ள கேட்டில் மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் எண் ஆகியவை எழுதி வைக்க கோவை மாநகரத்தில் உள்ள சில பிரிவு அலுவலகத்தில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது வீட்டின் முன் கதவில் மின் இணைப்பு எண் மற்றும் செல்போன் எண் எழுதப்பட்டுள்ளது. இதனால், மின் கணக்கீடு செய்யும் பணி எளிதாக இருப்பதாக கணக்கீட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories:

More