மழை நீர் தேங்கிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

மொடக்குறிச்சி,டிச.6: மொடக்குறிச்சி அருகே உள்ள பஞ்சலிங்கபுரம் அடுத்த ஆரியங்காட்டு ரயில்வே நுழைவு பாலத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையால் நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கி மழைநீர் செல்ல வழியில்லாமல் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்கள் உதவியுடன் அதிகாரிகள் குழாய் அடைப்புகளை எடுத்து விடப்பட்டு மழைநீர் வடிந்து சென்றது. இந்நிலையில் மொடக்குறிச்சி எம்எல்ஏ., டாக்டர்.சரஸ்வதி நேற்று ரயில்வே நுழைவு பாலத்தில் மழை நீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில்:

ஆரியங்காட்டு ரயில்வே நுழைவு பாலத்தில் இருபுறமும் இருந்து வரக்கூடிய மழைநீர் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழைக்காலங்களில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே தற்காலிகமாக மழை நீரை வெளியேற்றும் வகையில் ஏற்கனவே உள்ள குழாய்களை அப்புறப்படுத்தி புதிய குழாய்கள் அமைத்து மழைநீரை தேங்காதவாறு வெளியேற்றப்படும்.

மேலும் இந்த பகுதியில் நிரந்தரமாக மழை நீர் வடிந்து செல்லும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். தொடர்ந்து சாவடிப்பாளையம், காளமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மொடக்குறிச்சி செல்வகுமார்,முரளிதரன், மூர்த்தி செல்வகுமாரன்,கார்மேகம், ராஜா, சதீஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Related Stories: