பென்னாத்தூர் அருகே 2 பேர் பலி விவகாரம் மேலும் 12 இடங்களில் குடிநீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

அணைக்கட்டு, டிச. 6: பென்னாத்தூர் அருகே 2 பேர் பலியான விவகாரத்தில் மேலும் 12 இடங்களில் குடிநீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சி, அல்லிவரம் கிராமத்தில் வயிற்றுபோக்கு உள்ளிட்ட பாதிப்புகளால் சிறுவன் உள்பட 2 பேர் கடந்த 4 நாட்களுக்கு முன் உயிரிழந்தனர். இதனால் அந்த கிராமத்தில் 4வது நாளாக நேற்றும் மருத்துவ குழுவினர் சிறப்பு முகாம் அமைத்து அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் மாதிரிகளை மருத்துவ துறையினர் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், அல்லிவரம் கிராமத்தை தொடர்ந்து பென்னாத்தூர் காளியம்மன் கோயில் உள்ளிட்ட மூன்று இடங்களில் பொது மக்கள் குடிநீர் எடுத்து வந்த தண்ணீர் தொட்டிகளில் இருந்து தண்ணீரை பேரூராட்சி செயல் அலுவலர் அர்ச்சுணன் தலைமையிலான அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். மேலும் அந்த கிராமங்களில் குடிநீர் மாதிரி சேகரிக்கப்பட்ட இடங்களில் இருந்து குடிநீர் சப்ளை செய்வது நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12 இடங்களில் குடிநீர் மாதிரி சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து பேரூராட்சி துறை அதிகாரிகள் கூறுகையில், `அல்லிவரம் கிராமத்தில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக 3 இடங்களில் மக்கள் குடிநீர் எடுத்து வந்த மினிடேங்க் உள்ளிட்டவைகளில் இருந்து தண்ணீர் எடுத்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து நாளை (இன்று) சப்தலிபுரம், கேசவபுரம், அல்லிவரம் உள்பட பேரூராட்சிக்குட்பட்ட 12 இடங்களில் பொதுமக்களுக்கு வழங்கபட்டு வரும் குடிநீரை பாட்டில்களில் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு வேலூர் குடிநீர் வடிகால் வாரிய பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பப்பட உள்ளது.

இதில், வரும் முடிவை பொறுத்து குடிநீர் வழங்கலாமா அல்லது வேறு மாற்று ஏற்பாடுகள் செய்யலாமா என முடிவு செய்யபடும். அதுவரை குடிநீர் நிறுத்தபட்டுள்ள கிராமங்களில் உள்ள மக்களுக்கு டிராக்டர், லாரிகள் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், அல்லிவரம் கிராமத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதால் சுற்றியுள்ள கிராமங்களில் மக்களுக்கு தொடர் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் இருந்தால் அங்கு வந்து சிகிச்சை எடுத்து கொள்ளலாம்’ என்றனர்.

Related Stories: