பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய ₹2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் டிரைவர் உட்பட 2 பேர் கைது

பள்ளிகொண்டா, டிச.6: பெங்களூருவில் இருந்து காரில் கடத்திய ₹2 லட்சம் மதிப்பிலான 278 கிலோ குட்கா பொருட்களை பள்ளிகொண்டா டோல்கேட்டில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உட்பட 2 பேரை கைது செய்தனர். பெங்களூரில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு பள்ளிகொண்டா டோல்கேட் வழியாக நேற்று முன்தினம் இரவு காரில் குட்கா கடத்தி வரப்படுவதாக மாவட்ட உதவி காவல் ஆணையர் ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் இருந்து பள்ளிகொண்டா டோல்கேட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இரவு 9.30 மணியளவில் சந்தேகம்படும்படி வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 10க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, காருடன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்த நபரையும் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலூர் பலவன்சாத்துகுப்பம் பஜனை கோயில் தெருவை சேர்ந்த ஜாபர்கான்(26), ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் சாதிக்பாஷாநகரை சேர்ந்த அப்சல் பாஷா(29) ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

மேலும், ஜாபர்கான் தனது சொந்த காரில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பெங்களூருவில் இருந்து வாங்கி வருவதற்காக டிரைவர் அப்சல் பாஷாவை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, தடை செய்யப்பட்ட குட்காவை வெளிமாநிலத்திலிருந்து கடத்தி வந்ததாக அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், பறிமுதல் செய்த குட்காவின் மதிப்பு ₹2 லட்சம் எனவும், 278 கிலோ எடை உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அவர்கள் இருவரிடமும் சொந்த விற்பனைக்காக கடத்தி வந்தார்களா, இல்லை வேறேதேனும் ஏஜென்சிகளுடன் தொடர்பு உள்ளதா என சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Related Stories: