கிலோ ₹100க்கு விற்பனை புதுச்சேரியில் தக்காளி விலை மீண்டும் உயர்வு

புதுச்சேரி, டிச. 6: புதுச்சேரியில் தக்காளி விலை மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. நேற்று, கிலோ ரூ.100க்கு விற்பனையானது. தமிழகம், புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.150 வரை விற்பனையானது. மழை படிப்படியாக குறைந்து, தக்காளி கிலோ ரூ.40 வரை விற்கப்பட்டது. ஆனால் கடந்த 4 நாட்களாக படிப்படியாக மீண்டும் உயர்ந்தது. புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று தக்காளி ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனையானது.

கேரட் ரூ.70, பீன்ஸ் ரூ.100 (நேற்று முந்தைய விலை ரூ.80), கத்தரி ரூ.150, வெண்டை ரூ.100, புடலை ரூ.100, முருங்கை ரூ.200, குடை மிளகாய் ரூ.120 என ரூ.20 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது. அதேநேரம், வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை கடந்த ஒரு வாரமாக விற்கப்படுகிறது. ரூ.35க்கு விற்கப்பட்ட உருளைக்கிழங்கு ேநற்று ரூ.20 முதல் ரூ.30 வரை குறைந்துள்ளது. தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் அசைவ பிரியர்கள் முட்டை, மீன், இறைச்சியை அதிகம் நாட ஆரம்பித்துள்ளனர்.

இது குறித்து பெரிய மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் சிவகுருநாதனிடம் கேட்டதற்கு, வரத்து குறைவினால் விலை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் அதிக மழை காரணமாக காய்கறி விவசாயம் பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்து விட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தான் காய்கறி லோடு வருகிறது. அதுவும் குறைவாகவே வருகிறது. ஒரு லாரியில் முழுலோடு ஏற்றி வருவதற்குப் பதில் கால்வாசி தான் வருகிறது. முழுலோடு வந்தாலும், கால் லோடு வந்தாலும் ஒரே டீசல் செலவு தான். காய்கறி விலை உயர்வுக்கு இதுவும் காரணம். மேலும், வெண்டை, புடலை உள்ளிட்ட நாட்டு காய்கறிகள் இதுவரை இந்த அளவுக்கு விலை உயர்ந்தது கிடையாது. மழையால் வெண்டை, புடலை விவசாயம் பாதிக்கப்பட்டு செடிகள் அழுகி விட்டன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் வெண்டை, புடலை விவசாயத்தை ஆரம்பிப்பதற்கு அரசு மானியம் வழங்கி ஊக்கப்படுத்தினால் தான் பழைய நிலை திரும்பும் என்றார்.

Related Stories: