அரசு ஊழியர் சங்கம் யார் கட்டுப்பாட்டில் உள்ளது? இருதரப்பினர் வாக்குவாதத்தால் பாதியில் முடிந்த கூட்டம்

திருச்சி, டிச.6: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை மாநாடு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். துணைத்தலைவர் லட்சுமணன், பொது செயலாளர் லட்சுமிநாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் ‘1.7.2021 முதல் ஒன்றிய அரசு உயர்த்தி வழங்கியுள்ள 14 சதவீதம் அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு விதிகளை தளர்த்தி சிறப்பு நிகழ்வாக காத்திருக்கும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும். முதல்வரின் 110 விதியின் அறிவிப்பின்படி கருணை அடிப்படை நியமனங்கள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது மாநில துணைத்தலைவர் பெரியாசாமி, திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி, செயலாளர் பழனிசாமி தலைமையிலான குழுவினர் திரளாக வந்து கூட்டம் நடத்த எதிர்ப்பு ெதரிவித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவர்களுடன் கூட்டம் நடத்திய குழுவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் அன்பரசன் தலைமையில் ஒரு குழுவாகவும், தமிழ்ச்செல்வி தலைமையில் ஒரு குழுவாகவும் இரண்டாக பிரிந்து செயல்பட துவங்கியது.

இந்நிலையில் தமிழ்ச்செல்வி நடத்திய கூட்டத்துக்கு வந்த அன்பரசன் தலைமையிலான குழுவினர், சங்கம் எங்களது கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது. சங்கத்தின் கொடி, பேனரை பயன்படுத்தும் முழு உரிமை எங்களுக்கு தான் உள்ளது என்று கூறி கூட்டத்தை நிறுத்துமாறு கோஷம் எழுப்பினர். பின்னர் போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தமிழ்செல்வி கூறுகையில், ‘கூட்டத்தில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் மாவட்ட அளவிலான போராட்டம், ஜனவரியில் மாநில போராட்டம் நடத்த உள்ளோம்’ என்றார்.

இது குறித்து பால்பாண்டி கூறுகையில், ‘கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்ற தமிழ்செல்வி தலைமையிலான குழுவினர் வேண்டுமென்றே சங்கத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுகின்றனர். நாங்கள் தான் உண்மையான சங்கம். வரும் 18, 19ம் தேதி சென்னையில் மாநில மாநாடு நடத்த உள்ளோம். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். இதையறிந்த அவர்கள், திசைத்திருப்புவதற்காக கூட்டம் நடத்துகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் தெரிவித்து, கூட்டத்தை தடுத்து நிறுத்தினோம்’ என்றார்.

Related Stories: