அதிகாரிகளின் செயலால் மனஉளைச்சல் காவலர் தம்பதியர் தற்கொலை மிரட்டல் வீடியோ வைரலால் திருச்சியில் பரபரப்பு

திருச்சி, டிச.6: திருச்சி மாநகர காவல்துறையில் பணியாற்றும் தம்பதியினர் அதிகாரிகளின் செயலால் மனஉளைச்சலுக்குள்ளாகி குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக வீடியோ வெளியிட்டு இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி கே.கே.நகர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் ஜனார்த்தனன். இவரது மனைவி சுமதி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இருவரும் பாலக்கரை பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடியிருந்து வருகின்றனர். இந்த காவல் தம்பதியினர் அதிகாரிகளின் செயலால் மனஉளைச்சலுக்குள்ளாகி குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொள்ளபோவதாக வீடியோ வெளியிட்டிருப்பது காவல்துறை அதிகாரிகளிடையே அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர்கள் வீட்டிற்கு தனிப்பட்ட முறையில் சிசிடிவி கேமரா ஒன்றைப் பொருத்தியதாகவும், பாலக்கரை போலீசார் இது போன்ற கேமராக்களைப் பொருத்தக் கூடாது என்று கூறி இரவோடு இரவாக கேமராவைக் கழற்றி சென்றதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்புதான், இதே காவல்துறையினருக்கான குடியிருப்பில் வசிக்கும் தலைமை காவலர் வீட்டில் 33 பவுன் நகை கொள்ளை போனதுடன், பல வாகனங்களும் திருடு போய் உள்ளன. போதாத குறைக்கு இப்பகுதியில் கஞ்சா, மது என்று போதையில் சுற்றித் திரியும் இளைஞர்கள் ஏராளம். காவலர் குடியிருப்பில் வசிக்கும் தங்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் காவல்துறை நன்றாக இருந்தும், அதில் பணியாற்றும் காவலர்கள் சிலர் தீய செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. கெட்ட செயல்களை செய்வதில் காட்டும் வேகத்தை நல்ல செயல்களிலும் போலீசார் ஏன் காட்டக் கூடாது. காவலர்களிடம் போலீஸ் உயரதிகாரிகள் யாரும் குறைகள் கேட்பதில்லை. எனவும், அப்படியே நாம் தெரிவித்தாலும் அதை கண்டு கொள்வதில்லை. போலீசாருக்கு வார விடுமுறையை தற்போதைய அரசு அறிவித்திருந்தாலும், அந்த விடுமுறை நாளிலும் வேலைக்கு வர அதிகாரிகள் நிர்ப்பந்திக்கின்றனர். தங்களின் பெண் குழந்தையின் பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதை போலீசார் அப்புறப்படுத்தியது வேதனையளிக்கிறது. இந்த பிரச்னையில் முதல்வர் தலையிட்டு உடனடியாக தீர்வு வழங்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக அதில் உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருவது காவல்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: