குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் அமைச்சர் மனோ தங்கராஜ் உறுதி

நாகர்கோவில், டிச.6 :  குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார். குமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணை வழங்குதல் மற்றும் கொரோனா, மழை வெள்ளப்பாதிப்பின் போது சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். எஸ்.பி. பத்ரி நாராயணன் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புக்கான ஆணையை வழங்கினார். கொரோனா மற்றும் மழை வெள்ளத்தின் போது சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  

அந்த வகையில் தீயணைப்புத் துறையில் 35 பேருக்கும், சுகாதாரத் துறையில் 110 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 16 பேருக்கும், போலீஸ் துறையில் 29 பேருக்கும், மின்சாரத்துறையில் 41 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கி அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது: குமரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் வெள்ளத்துக்கு எதிராக அனைத்துத்துறை பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அவ்வாறு பணி செய்பவர்களுக்கு சிறிய ஊக்குவிப்பு கூட பெரிய பணிகளுக்கு எடுத்து செல்லும். குமரி மாவட்டம் கொரோனாவில் சிக்கி பல்வேறு இன்னல்களை சந்தித்தது. இந்த ஆண்டில் மட்டும் 3 முறை வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. சின்ன மழைக்கு கூட தண்ணீர் வடியவில்லை, மின்சாரம் இல்லை, சாலை துண்டிப்பு உள்ளிட்ட காரணங்களை கூறி பெரிய அளவில் போராட்டடம் நடத்துவார்கள். ஆனால் இப்போது அப்படி எந்த போராட்டமும் நடக்கவில்லை.

அந்தளவுக்கு பணி செய்துள்ளோம். அதற்கு மகிழ்ச்சியடைகிறேன். மேலும் வெள்ளப்பாதிப்பை இந்த முறை கையாண்டது போன்று எப்போதும் கையாண்டது இல்லை என்று முதல்-அமைச்சரிடமும் எடுத்துக் கூறினேன். இது ஒரு கூட்டு முயற்சி ஆகும். எந்த முயற்சி மேற்கொண்டாலும் அதில் மக்கள் பங்களிப்பு இருந்தால் தான் சாதிக்க முடியும். குமரி மாவட்டத்தில் மின்சாரத்துறை, வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை பணியாளர்களும் சிறப்பாக பணியாற்றினார்கள். அதோடு வெள்ளப்பாதிப்பு வந்த போதும் கூட தடுப்பூசி போடுவது நிறுத்தப்படவில்லை. வெள்ளம் பாதித்த முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த மக்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் 58 நபர்களுக்கு விவசாய மின் இணைப்பு ரூ.46 லட்சத்து ஆயிரத்து 440 மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் தோழனாக இந்த அரசு செயல்படுகிறது. வெள்ள பாதிப்புக்கான நிவாரணம் விவசாயிகளுக்கு முறையாக வழங்கப்படும். ஒன்றிய அரசிடம் இருந்து பெறப்பட வேண்டிய நிதியை பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். குமரி மாவட்டத்தில்  வெள்ளத்தால் ஏற்பட்ட பகுதிகளில் தற்காலிக சீரமைப்புக்கு ரூ.36 கோடியும், நிரந்தர சீரமைப்பு பணிக்காக ரூ.242 கோடியும் கோரப்பட்டுள்ளது.  மின்வாரியத்துக்கு ரூ.5.45 கோடி சேத மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகர தி.மு.க. செயலாளர் மகேஷ், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கலெக்டர், எஸ்.பி.க்கு பாராட்டு

அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், குமரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 800 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அது தொடர்பாக 150 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இளைஞர்கள் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். எனவே போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு என் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். அது மட்டும் அல்லாது மாவட்ட கலெக்டர் எவ்வளவு முயற்சி எடுத்தாலும் கீழ் உள்ள பணியாளர்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் மாற்றத்தை கொண்டு வரமுடியும். எனவே பணியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கான பணிகளை எடுத்து வருகிறோம். அதற்கு அனைத்து பணியாளர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். அவ்வாறு செயல்பட்டால் தான் இது நமது அரசு என்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகும். குமரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு வளர்ச்சிகள் உருவான வரலாறு உள்ளது. குமரி மாவட்ட கலெக்டர் இந்த மண்ணின் மைந்தனாகவே செயல்படுகிறார். அந்த உணர்வு அனைவருக்கும் வரவேண்டும் என்றார்.

Related Stories: