மண் வளத்தை காப்பாற்ற மரக்கன்று நடுவோம்

செம்பனார்கோயில், டிச.6: செம்பனார்கோயில் அருகே பரசலூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, ஊரக புத்தாக்க திட்டம், விவசாய உற்பத்தியாளர்கள் குழு, ஊராட்சி மன்றம் ஆகியன சார்பில் உலக மண்வள நாள் விழா நடந்தது. விழாவிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம், துணைத் தலைவர் சங்கீதா நாராயணன், ஊரக புத்தாக்க திட்ட செயல் அலுவலர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை வளர்ப்போர் குழுவை சேர்ந்த இந்திரா வரவேற்றார். விழாவையொட்டி காமராஜர் விவசாய உற்பத்தியாளர்கள் குழுவினரின் மண் வளம் காப்பது குறித்த விழிப்புணர்வு நாடகம் நடந்தது. தொடர்ந்து வேளாண்மை உதவி இயக்குனர் பேசுகையில், மண்ணில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. நமக்கு பயன்படும் பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் மண் வளத்தின் மூலம் பெறப்படுகிறது.

மேலும் மழை பொழியவும் மண் வளம் பெரிதும் உதவியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் ஆங்காங்கே மரங்களை வளர்த்து மண் வளத்தை காப்பாற்ற வேண்டும். தொடர் மழையால் பாதிக்கப்பட்ட இளம்நெற்பயிர்களை ஏக்கருக்கு ஜிங்க் சல்பேட் 10 கிலோ அல்லது நுண்ணூட்டம் 5 கிலோ பயன்படுத்தி காப்பாற்றலாம். எனவே விவசாயிகள் இந்த முறையை பின்பற்றி பயனடைய கேட்டுக்கொள்கிறேன் என்றார். தொடர்ந்து விழிப்புணர்வு கோலப்போட்டியில் கலந்து கொண்ட மகளிருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அனைவருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பின்னர் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இறுதியாக விழாவில் கலந்து கொண்ட அனைவரும் மண் வளத்தை காப்போம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஊரக புத்தாக்க திட்ட வட்டார அணித் தலைவர் அமலோற்பவ மேரி, ஊராட்சி செயலர் நாகராஜன் மற்றும் விவசாய மகளிர் குழுவினர் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More