அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.13 லட்சம் மோசடி முதியவர் சிக்கினார்

சென்னை: செங்கல்பட்டு அடுத்த பெரிய நத்தம் கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த லோகநாதன் மனைவி வேதவள்ளி. இவர், ஆசிரியர் படிப்பு முடித்து அரசு பள்ளி வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது, லோகநாதனின் நண்பர் அனுமந்த பொத்தேரியை சேர்ந்த சரவணன் மூலம் தண்டையார்பேட்டை பிரின்ஸ் வில்லேஜ் பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (50) அறிமுகமானார். இவர், ‘‘இந்தியா முழுவதும் செயல்படும்  மத்திய அரசு  பள்ளிகளான  கேந்திர வித்யாலாயா பள்ளியில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணிக்கு ஆட்கள் எடுப்பதாகவும், அந்த பள்ளி தலைமை நிர்வாகத்தில் தனக்கு நேரடி தொடர்பு இருப்பதால், வேலை வாங்கி தருகிறேன் என்றும் லோகநாதனிடம் கூறியுள்ளார்.

மேலும், இதற்காக வேதவள்ளியிடம் ரூ.13 லட்சத்தை ரவிக்குமார் பெற்றுள்ளார். ஆனால், ஒரு வருடமாகியும் வேலையும் வாங்கி தரவில்லை. பணத்தையும் திரும்ப தராமல் தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி செங்கல்பட்டு நகர காவல்நிலையத்தில் வேதவள்ளி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, ரவிக்குமாரை கைது செய்து, அவர்மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டில் மட்டும்  வேதவள்ளி உள்பட 5க்கும் மேற்பட்டோரிடம்  சுமார் ரூ.50 லட்சம் வரை ரவிக்குமார் மோசடி செய்திருப்பதும், வேதவள்ளி தவிர மற்றவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ரவிக்குமார் மீது புகார் அளித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ரூ.4 லட்சம் திருடிய 3 பேர் கைது: திருவொற்றியூர் திருமலை அவென்யூவை சேர்ந்த பிரகாஷ் ரெட்டி (73) என்பரின் பைக்கில் வைத்திருந்த ரூ.4 லட்சத்தை திருடிய, திருவொற்றியூரை சேர்ந்த பன்னீர்செல்வம் (33), சங்கர் (38), ஆட்டோ ஓட்டுனர் அஜித் (39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: