கண்டக்டரிடம் ரகளை செய்தவர் கைது

குடியாத்தம், டிச.5: குடியாத்தம் அடுத்த கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன்(55), கூலித்தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து வீட்டிற்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு ஒடுகத்தூர் செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டர் ரமேஷ் என்பவர், பயணிகளை ஏற்றிக்கொண்டிருந்தார். அவரிடம், சின்னப்பன் குடிபோதையில் வீண் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டாராம். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சின்னப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை குடியாத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில்  4.41 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு  கலெக்டர் தகவல்

வேலூர், டிச.5: தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை (20 பொருட்கள் அடங்கிய தொகுப்பு) 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்கு, மொத்தம் 1,088 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 41 ஆயிரத்து 190 குடும்ப அட்டைதாரர்களும், 365 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிபவர்கள் என மொத்தம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 555 குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஒரு பயனாளிக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கு ₹505 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதன்படி, 4 லட்சத்து 41 ஆயிரத்து 555 பயனாளிகளுக்கு ₹22 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்து 275 நிதி மதிப்பிலான பொருட்களை வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.

Related Stories: