கவுன்டன்யா மகாநதி ஆற்றங்கரையில் ஆக்கிரமிப்பு கணக்கெடுக்க சென்ற அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை

குடியாத்தம், டிச.5: குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி 20 ஆயிரம் கனஅடி தண்ணீர் கவுன்டன்யா ஆற்றில் வெளியேறியது. இருகரைகளையும் தொட்டப்படி சென்ற இந்த வெள்ளத்தால் ஆற்றின் கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ஆற்றின்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை கணக்கெடுத்து இடித்து அகற்ற கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். அதன்பேரில், முதல்கட்டமாக குடியாத்தம் காமராசர் பாலம் அருகே 24 வீடுகள் மற்றும் 2 கடைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

இந்நிலையில், பாவோடும்தோப்பு பகுதியில் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை கணக்கெடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது, அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகிறோம். குடியிருப்பு பகுதிக்குள் ஆற்றுவெள்ளம் புகாதவாறு இருக்க ஆற்றங்கரையோரம் தடுப்பு சுவர் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதம் செய்தனர்.

இதனால், பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமரசம் செய்தனர். தொடர்ந்து, அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: