கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதியில் மழைநீரில் மூழ்கி பாதிக்கப்பட்ட பயிர்களில் கொக்கிப்புழு தாக்குதல்

கொள்ளிடம் : கொள்ளிடம் பகுதியில் மழையில் எஞ்சிய பயிர்களை காப்பாற்ற உரமிட்டு வந்த நிலையில் தற்போது நெற்பயிரை கொக்கிப்புழு தாக்கி வருவதால் அதனை கட்டுப்படுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், சீர்காழி பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து நான்கு நாட்கள் கனமழையால விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை ஓய்ந்திருந்த நிலையில் கொள்ளிடம் அருகே உள்ள கோதண்டபுரம், நல்லூர், மகேந்திரபள்ளி, வெட்டாத்தாங்கரை உள்ளிட்ட சில பகுதிகளில் மேடான பகுதிகளில் மழைநீர் வடிந்நு வருகிறது.

 இதனால் மழைநீரில் தப்பிய பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் தற்போது உரமிடும் பணியை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் மழை நீரில் மூழ்கியிருந்த சம்பா பயிர்களில் கொக்கிப்புழு உருவாகியுள்ளது. இது விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களைக் காப்பாற்ற ஏக்கருக்கு ரூ.10,000 வரை கூடுதலாக செலவு செய்து வரும் நிலையில் தற்போது பயிர்களில் கொக்கிப்புழு உருவாகியிருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது கொக்கிப்புழு ஆரம்ப கட்ட நிலையில் தாக்கி வருகிறது. தொடர்ந்து மேலும் பரவி தாக்காத வகையில் கொக்கிப்புழு தாக்குதலை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இல்லையேல் சம்பா பயிர் முற்றிலும் சேதமடைய வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே வேளாண்துறை அதிகாரிகள் அனைத்து பயிர்களையும் ஆய்வு செய்து கொக்கிப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு உரிய ஆலோசனை வழங்கவும் மற்றும் மானிய விலையில் மருந்துகள் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More