வர்த்தக, தொழில் கழகம் சார்பில் கரூர் மாநகராட்சி பகுதிகளில் 100 இடங்களில் சிசிடிவி கேமரா

கரூர், டிச.5: கரூர் மாவட்ட வர்த்தக கழகம் மற்றும் தொழில் கழகம் சார்பில் பொது இடங்களில் திருட்டு மற்றும் குற்ற சம்பவங்களை குறைப்பதற்காக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 100 சிசிடிவி கண்காணிப்பு கேமரா துவக்க நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. வர்த்தக சங்கத் தலைவர் வக்கீல் ராஜீ தலைமை தாங்கினார். கலெக்டர் பிரபு சங்கர், எஸ்பி சுந்தரவடிவேல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

சங்கச் செயலாளர் கேஎஸ் வெங்கட்ராமன் வரவேற்றார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் செந்தில்பாலாஜி 100 கண்காணிப்பு கேமராக்களை தொடங்கி வைத்து பேசும்போது, திருப்பூர் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக கரூர் மாவட்டத்தில் ஆண்டிற்கு சுமார் ரூ 10,000 கோடி வரை ஜவுளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதை கருத்தில் கொண்டு வணிகர் நலன் பேணும் அரசாக தமிழக அரசு செயல்படும். மின் இணைப்பைப் பொருத்தமட்டில் தமிழகத்தில் விண்ணப்பித்த மறுநாளே இணைப்பு வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனவே அதில் வணிகர்களுக்கு ஏதும் சிரமம் இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். கரூர் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு உள்ள முதல் மாவட்டமாக இருக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.கூட்டத்தில் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: