6ம்தேதி முதல் நான்கு நாட்கள் கரூர் மாநகராட்சி பகுதியில் பழைய மின்கம்பிகளை மாற்றும் பணி

கரூர், டிச.5: கரூர் மாநகராட்சி பகுதிகளில் பழைய மின்கம்பிகளை மாற்றி அதிக திறன்வாய்ந்த புதிய மின்கம்பிகள் அமைக்கும் பணி நாளை முதல் வருகிற வியாழக்கிழமை வரை நடைபெறுவதால் அந்தந்த பகுதியில் காலை 8 மணிமுதல் பகல் 2 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாநகராட்சி உட்பட்ட பகுதிகளில் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பாக மின்வாரியத் துறை மூலமாக அப்போது மின் இணைப்பு கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட மின் கம்பிகள் மிகவும் பழமையானதாகும். குறைந்த மின் திறனை கடத்தும் கம்பிகளாக உள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் பொதுமக்கள் மின்வாரிய துறையிடம் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாலும் மின்திறன் குறைவாக இருப்பதாலும் அதனை மாற்றி தர வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோருக்கு கோரிக்கை விடுத்தனர். இதனடிப்படையில் கரூர் மாநகராட்சி பகுதியில் பழைய மின் கம்பிகளை மாற்றி புதிய சக்தியுள்ள மின்திறன் கம்பி அமைக்கும் பணி நாளை (6ம் தேதி) முதல் வருகிற வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.

இதன்படி 6ம் தேதி (திங்கட்கிழமை) மின் கம்பிகளை மாற்றும் பொருட்டு சின்னஆண்டான்கோவில் பகுதிக்குட்பட்ட முன்னாள் எம்பி கே.சி.பி. வீடு முதல், எம்ஜிஆர் நகர், காந்தி நகர், சுப்பையா பிள்ளை லேயவுட், ஏவிஎஸ், ஏவிஆர் காலனி ஆகிய பகுதிகளிலும், 7ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பழைய பைபாஸ் ரோடு உழவர்சந்தை முதல் லெட்சுமிபுரம், பைபாஸ் ரோடு, நரசிம்மபுரம் பி பிளாக், நரசிம்மபுரம் வடக்கு ஆகிய பகுதியிலும் 8ம் தேதி (புதன்கிழமை) உழவர் சந்தை முதல், லைட் ஹவுஸ் பகுதிக்குட்பட்ட படிக்கட்டு துறை, லைட் ஹவுஸ், நரசிம்மபுரம், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளும் 9ம் தேதி (வியாழக்கிழமை) மக்கள் பாதை, வஞ்சியம்மன் கோவில் தெரு, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் கணிகை மார்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More