கொங்கணாபுரத்தில் திமுகவினர் தூர்வாரிய கச்சிராயன் ஏரி 50 ஆண்டுக்குப் பிறகு நிரம்பியது

இடைப்பாடி, டிச.5: சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் கொங்கணாபுரம் கச்சிராயன் ஏரி நிரம்பாமல் இருந்தது. இந்த ஏரி சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் இரண்டு ஆண்டுக்கு முன் தூர்வாரப்பட்டது. இந்த ஏரியை தற்போதைய முதலல்வர் மு.க. ஸ்டாலின் 2வருடங்களுக்கு முன் ஆய்வு செய்தார். தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக வைகுந்தம், வெள்ளையம்பாளையம் ஏரிகள் நிரம்பி கச்சிராயன் ஏரி மட்டும் நிரப்பாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையின் காரணமாக, வைகுந்தம் மற்றும் வெள்ளையம்பாளையம் ஏரி உபரிநீர் கச்சிராயன் ஏரிக்கு வந்தடைந்தது. இதனால் கொங்கணாபுரம் கச்சராயன் ஏரி 50 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது.

தற்போது இந்த ஏரி நிரம்பி வழிவதால் உபரி நீரானது, சங்ககிரி பிரதான சாலையில் செல்வதால் சாலை சேதம் அடைந்துள்ளது. மேலும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் அப்பகுதியில் சாயும் நிலையில் இருந்ததால், நெடுஞ்சாலை துறை மின்சார துறையினர் டிரான்ஸ்பார்மரை அகற்றினர். மேலும் நேற்று காலை 6 மணி முதல் இரவு வரை போக்குவரத்து தடைசெய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் மாற்றி விடப்பட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் சிரமடைந்தனர். அப்பகுதியில் சங்ககிரி ஆர்டிஓ வேடியப்பன், இடைப்பாடி வட்டாட்சியர் விமல் பிரகாசம், மாவட்ட திமுக துணை செயலாளர் சம்பத்குமார், கொங்கணாபுரம் திமுக ஒன்றிய செயலாளர் பரமசிவம், இடைப்பாடி நகர திமுக செயலாளர் பாஷா, கொங்கணாபுரம் பேரூர் செயலாளர் அர்த்தநாரீஸ்வரன் ஆகியோர் வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளை பார்வையிட்டு, தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏரிக்கரையில் ஓரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: