மருத்துவ கழிவுகளால் தொற்று நோய் அபாயம்

சங்ககிரி, டிச.5: சங்ககிரி அருகே ஆனைக்கல் பாளையம் முருங்கைகாடு பகுதியை சேர்ந்த மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: சங்ககிரி பேரூராட்சி, ஆனைக்கல்பாளையம் முருங்கைக்காட்டு பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்திற்கு சொந்தமான ஐயனாரப்பன் குலதெய்வம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் ஆனைக்கல்பாளையத்தை சேர்ந்த தனியார் நிலத்திற்கு சொந்தக்காரர், கோயிலுக்கு எதிரே சுமார் 20அடி பள்ளம் தோண்டி, அதில் பிளாஸ்டிக் கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளை லாரி லாரியாக  ஏற்றி வந்து கொட்டி வருகிறார்.

அதில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன் அருகே விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலப்பதால், குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: