அணைக்கட்டில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை தேடும் பணி 2ம் நாளாக தீவிரம்

விருத்தாசலம், டிச. 5:  விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் வினோத்குமார்(21). வேல்முருகன் துபாயில் வேலை செய்து வருகிறார். வினோத்குமாரின் நண்பர்கள் மதியழகன் (21), ரஞ்சித்குமார் (23), விக்ரம் (24) ஆகிய நான்கு பேரும் நேற்றுமுன்தினம் விருத்தாசலம் அடுத்த வி.குமாரமங்கலம் அணைக்கட்டில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வினோத்குமார், மதியழகன் உள்ளிட்ட 4 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இதைப்பார்த்த கிராம மக்கள் விருத்தாசலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மதியழகன், ரஞ்சித்குமார், விக்ரம் ஆகிய மூன்று பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர். இதில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வினோத்குமாரை மட்டும் காணவில்லை. அவரை தேடும் பணியில் நேற்று காலை முதல் இரண்டாவது நாளாக விருத்தாசலம் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலூர் வெள்ள மீட்பு குழுவை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் மில்டன் தலைமையிலான குழுவினரும் ரப்பர் போட் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

 நேற்று மாலை 6 மணி வரை தேடியும் இளைஞர் வினோத்குமார் உடல் கிடைக்கவில்லை இதனால் அக்கிராமமே மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில் துபாயில் வேலை செய்து கொண்டிருந்த வேல்முருகன் தனது மகன் தண்ணீரில் அடித்து சென்ற செய்தியறிந்து நேற்று சொந்த ஊர் திரும்பியுள்ளார். கம்மாபுரம் சப் இன்ஸ்பெக்டர் டைமண்துரை தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: