₹1,500க்கு திருட்டு பைக்கை வாங்கி ஓட்டி வந்த வாலிபர் சிக்கினார்

புதுச்சேரி,  டிச. 5: புதுச்சேரி கிழக்கு எஸ்பி  (பொறுப்பு) ஜிந்தா கோதண்டராமன் தலைமையில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர  வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி சம்பவத்தன்று எஸ்ஐ  சிவசங்கரன் தலைமையிலான போலீசார், செஞ்சி சாலையில் அரசு பொது மருத்துவமனை  அருகே வாகன தணிக்கை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் தமிழக  பதிவெண் கொண்ட பைக்கில் வேகமாக வந்த ஒருவரை நிறுத்தி, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்  சுனாம்மேடு நடுத்தெருவைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் (22) என்பதும், அவர் ஓட்டிவந்தது திருட்டு  பைக் என்பதும் தெரிந்தது.

  ஜெயபிரகாஷ் அந்த பைக்கை திருடாத நிலையில், அவருக்கு அறிமுகமான மரக்காணம்  ஜிடி குப்பத்தில் வசிக்கும் மகாவீர் மற்றும் ஆலந்தூர் பொறாமணி ஆனந்த் என்ற  திலீப் ஆகியோரிடம் இருந்து, இது திருட்டு வண்டி என தெரிந்தும் ரூ.1,500க்கு  வாங்கி ஓட்டி வந்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து ஜெயபிரகாஷ் மீது திருட்டு பொருளை வாங்கிய  குற்றத்தில் கைது செய்த போலீசார், அவர் ஓட்டி வந்த பைக்கையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வண்டியை திருடி அவருக்கு விற்ற  மரக்காணத்தை சேர்ந்த மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர். சிறப்பாக செயல்பட்ட பெரியகடை போலீசாரை, சீனியர் எஸ்பி லோகேஸ்வரன்  பாராட்டினார்.

Related Stories: