வெள்ளநீரை அகற்றும் போது துர்நாற்றம் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

கடலூர், டிச. 5: கடலூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் ெதாடர் மழை பெய்தது. இதனால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. தற்போது, மழை ஓய்துள்ள நிலையில் வெள்ளநீர் தேங்கிய பகுதிகளில் இருந்து ராட்சத மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை கடலூர் கோண்டூர் அபிராமி நகர், ஓம்சக்தி நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் பணி நடந்தது. அப்போது, வெள்ள நீருடன் கழிவுகள் கலந்து வெளியேற்றப்பட்டதால் ரட்சகர் நகர், தீபன் நகர், திருமூர்த்தி நகர் குடியிருப்புகளில் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு அடைந்தது.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் காங்கிரஸ் நகர செயலாளர் கோபால் தலைமையில் நேற்று காலை செம்மண்டலம் பகுதியில் உள்ள நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுநகர் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். மேலும் அபிராமி நகரில் இருந்து வெள்ளநீரை வெளியேற்றும் பணிகள் நிறுத்தப்பட்டு, சுகாதார சீர்கேடு ஏற்பட்ட தீபன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீரை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: