மக்கள் முற்றுகை போராட்டம் அறிவிப்பு சமாதான கூட்டம் தோல்வியில் முடிந்தது

விருத்தாசலம், டிச. 5: விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் குடிநீர், சாலை, நீர்நிலைகள் தூர்வாரி தருவதாக என்எல்சி நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. ஆனால் என்எல்‌சி நிர்வாகம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தராததால் ஆத்திரமடைந்த வடக்குவெள்ளூர், வெளிக்கூனங்குறிச்சி கிராம மக்கள் வருகின்ற 12ம் தேதி நெய்வேலி என்எல்சி இந்தியா லிமிடெட் இரண்டாம் சுரங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று கோட்டாட்சியர் ராம்குமார் தலைமையில் விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் சிவகுமார் முன்னிலையில் இருதரப்பு சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் என்எல்சி அதிகாரிகள் சிவகுமார், கணேசன் உள்ளிட்டோரும் வடக்கு வெள்ளூர் ஊராட்சி மன்ற தலைவர் மலர்விழி, ஊராட்சி செயலாளர் மணிகண்டன், மாவட்ட கவுன்சிலர் ரகுராமன் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

 இரு தரப்பு சமாதான பேச்சுவார்த்தையின் நிறைவாக என்எல்சி நிர்வாகம் சார்பில் வடக்கு வெள்ளூர் ஊராட்சியில் உடனடியாக குடிநீர் வசதி மற்றும் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் அமைத்து தரப்படும். மயானம் சீரமைத்து தரவும், சாலை வசதி அமைத்து தரவும், வடக்கு வெள்ளூர் அரசு பள்ளியில் கழிவறை மற்றும் தண்ணீர் வசதிசெய்து தரவும், நீர்நிலைகளை தூர்வாரி தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராம மக்கள் தெரிவித்தனர். அதனை உடனடியாக செய்து தரக்கோரி என்.எல்.சி அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் ராம்குமார் அறிவுறுத்தினார். இதையடுத்து என்எல்சி அதிகாரிகள் அனைத்து பணிகளையும் உடனடியாக நிறைவேற்றி தரமுடியாது என தெரிவித்தனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சமாதான கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, சமாதான கூட்டம் வரும் திங்கட்கிழமை நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: