10 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லை குமரியில் 29 அரசு பஸ்களின் தகுதி சான்று ரத்து

நாகர்கோவில், டிச.5 : குமரி மாவட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாமல் இயங்கிய 29 அரசு பஸ்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி கூறினார். அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக, அரசு பஸ்கள் போதிய பராமரிப்பு இல்லாத நிலையில் இருந்தன. இதன் காரணமாக தற்போது மழை நேரங்களில் பஸ்களில் தண்ணீர் ஒழுகி, பஸ்சுக்குள் குடைபிடித்தபடியே செல்லும் நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், அரசு பஸ்களை முறையாக ஆய்வு செய்து தேவையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் அறிவுத்தலின் பேரில், தற்போது அரசு பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி குமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக, அரசு பஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகம், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் என இரு பிரிவுகளாக அரசு பஸ்களில் ஆய்வு நடந்தது. இது பற்றி அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக நடந்த ஆய்வில் 29  அரசு பஸ்கள் குறைபாடுகளுடன் இருந்தது தெரிய வந்தது. மேற்கூரைகளில் நீர் கசிவு, முதலுதவி பெட்டி இல்லாதது, கியர் பாக்ஸ் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த பஸ்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டு, உரிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.

இதற்கிடையே தொழிற்சங்கத்தினர் கூறுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் பணியாளர்கள் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. இதனால் தொழில் நுட்ப ஊழியர்கள் உட்பட அதிக அளவில் காலிப்பணியிடம் உள்ளதால் பேருந்துகள் முறையாக  பராமரிக்கப்படவில்லை. பழுதடையும் பேருந்துகளுக்கு தேவையான உதிரிபாகங்களை வாங்குவதில் நிர்வாகம் கவனம் செலுத்துவதில்லை. எப்.சி. காட்டும் போது, பஸ்சை கழுவி சுத்தம் செய்து, பெயிண்ட் மட்டும் அடித்து கொண்டு செல்வார்கள். உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பஸ் நன்றாக உள்ளதாக தகுதி சான்று கொடுத்து விடுவார்கள் என்றனர்.

தற்போது குமரி மாவட்டம் முழுவதும் சாலைகள் மிகவும் பழுதடைந்து உள்ளதால் பேருந்துகள் பெரும்பாலானவை பழுதுடைந்து காணப்படும் நிலையில், அப்பேருந்துகளை ஓட்டுநர்கள் சிரமத்தோடு ஓட்டும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாகவும் டிரைவர்கள் கூறினர்.

Related Stories: