கோவை நோக்கி வந்தபோது திருப்பூரில் விபத்து டிவைடரில் வேன் ஏறி சாலையில் கவிழ்ந்தது

திருமுருகன்பூண்டி, டிச. 5:  சென்னையிலிருந்து கோவை நோக்கி உணவு பொருள் ஏற்றி வந்த வேன் திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா பள்ளி முன்பு டிவைடரில் ஏறி சாலையில் கவிழ்ந்தது. இவ்விபத்து தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார். சென்னை, திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால்.இவரது  மகன் தேவராஜ் (29). இவர் சென்னையை சேர்ந்த ஆன்லைன் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு சென்னையில் இருந்து வேனில் உணவு பொருட்களை ஏற்றிக்கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தார். வழியில் திருப்பூரில் உணவு பொருட்களை இறக்குவதற்காக அவிநாசி ரோட்டில் திருமுருகன்பூண்டி, அம்மாபாளையம், ராமகிருஷ்ணா பள்ளி முன்பு உள்ள வளைவு ரோட்டில் வேகமாக  வந்துகொண்டு இருந்தார்.

அப்போது காலை 5 மணிக்கு வேன் வளைவு ரோட்டில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் நடுவே போடப்பட்டு இருந்த டிவைடரில் ஏறி சாய்ந்து கவிழ்ந்தது. இதில் வேனின் வலது புறப்பகுதி சேதமானது. டிரைவருக்கு தலையில் லேசான காயம் ஏற்பட்டு உயிர் தப்பினார்.  நல்லவேளையாக முற்றிலும் குளிரூட்டப்பட்ட வேனில் இருந்த 500 கிலோ கோழி, மட்டன், மீன் போன்ற உணவு பொருட்கள் சேதம் அடையாமல் தப்பியது.

மேலும் வேன் மோதியதில் டிவைடரின் நடுவில் இருந்த ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சோலார் மின்கம்பம் 3 ஆக மடங்கி ரோட்டின் மறுபுறம் வந்து விழுந்தது.  அப்போது ரோட்டில் மக்கள்  நடமாட்டமோ, வாகன போக்குவரத்தோ  இல்லை. அதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூண்டி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மின்கம்பத்தை அகற்றினர். மேலும், எடை தூக்கும் லாரிகள் கொண்டுவரப்பட்டு வேன் அப்புறப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே சென்னையில் இருந்த உணவு பொருட்கள் நிறுவன உரிமையாளர்கள் பூண்டி பேரூராட்சி அதிகாரிகளிடம் சேதம் அடைந்த மின் கம்பத்திற்கான செலவை ஏற்பதாக முதலில் கூறினர். பின்னர் பணம் குறித்த விஷயத்தில் சமரசம் ஆகவில்லை. இதைத்தொடர்ந்து  திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் திருமுருகன்பூண்டி போலீஸ் எஸ்ஐ ராஜூ, ஏட்டு மனோகரன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் தேவராஜை கைது செய்தனர்.

Related Stories: