சோமனூர் அருகே மெடிக்கல் ஸ்டோரில் ஊசி போட்ட ஒர்க்க்ஷாப் தொழிலாளி பலி

சோமனூர், டிச.5:  சோமனூர் அருகே வாலிபர் தலைவலிக்கு மெடிக்கல் ஸ்டோரில் ஊசி போட்டதை தொடர்ந்து மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சோமனூர் அடுத்த நீலம்பூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (28). ஒர்க் ஷாப் தொழிலாளி. இவரது தங்கை சத்யா வாகராயம்பாளையம் அருகே உள்ள மோப்புரிபாளையத்தில் வீடு கட்டி வருகிறார். கடந்த வாரம் தங்கையை பார்க்க கார்த்தி தனது மனைவி கிரிஸ்டியுடன் (26) வந்துள்ளார். அப்போது தலைவலியால் கார்த்தி அவதிப்பட்டார். அப்போது வாகராயம்பாளையத்தில் உள்ள அருண் (40) என்பவரது மெடிக்கலில் மருந்து, மாத்திரை வாங்கியதோடு அருண் இவருக்கு இடுப்பில் ஊசி போட்டுள்ளார்.

 அப்போது தலைவலி சரியாகி விட்ட நிலையிலும், ஊசி போட்ட இடத்தில் செப்டிக் அடைந்து தடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வலி அதிகமானதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையை அணுகியபோது அங்குள்ள மருத்துவர்கள் ஆலோசனையின்படி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ஆனாலும் உடல் நிலை சீராகவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை மிகவும் பாதிக்கவே, உறவினர்கள் அவரை மீண்டும் வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்காக கார்த்தியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மெடிக்கலில் ஊசி போட்டதால்தான் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திக்கின் மனைவி கிறிஸ்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருந்துக்கடையில் ஊசி போட்டதால்தான் கார்த்தி இறந்தாரா? என்பது அவரது உடல் பிரேத பரிசோதனையில் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories:

More