ஊட்டி - குன்னூர் சாலையோரங்களில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி துவக்கம்

ஊட்டி, டிச. 5: ஊட்டி - குன்னூர் சாலையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க புதிதாக கால்வாய் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டி நகரின் நுழைவு வாயில் பகுதியாக சேரிங்கிராஸ் பகுதியாக உள்ளது. சவுத்வீக் பகுதியில் இருந்து சேரிங்கிராஸ் பகுதி வரை சாலையோரத்தில் இரு புறங்களிலும் கால்வாய் இருந்தது. இதனால், மழைக்காலங்களில் தண்ணீர் கால்வாய்களில் வழிந்து ஓடிவிடும்.

 ஆனால், இப்பகுதியில் இரு புறங்களிலும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்ட நிலையில், தண்ணீர் செல்ல வழி இல்லாமல் போனது. மேலும், இது தாழ்வான பகுதி என்பதால், மழைக்காலங்களில் நொண்டிமேடு, சவுத்வீக் போன்ற பகுதிகளில் இருந்து வரும் தண்ணீர் இங்கு குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும் மழை பெய்யும் சமயங்களில் காற்றாறு போல் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், இச்சாலையில் இருபுறங்களிலும் மீண்டும் கால்வாய் அமைக்க வேண்டும். சேரிங்கிராஸ் பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை இப்பகுதியில் சாலையின் இரு புறங்களிலும் தற்போது மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதனால், இச்சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்போது கால்வாய் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வட்டார போக்குவரத்து அலுவலம் முதல் தற்போது சேரிங்கிராஸ் வரையில் சாலையோரத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

Related Stories: